ஃபிலிம்மேக்கர் ஆக வேண்டும்.. ஆனால் படித்ததோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங். (பொதுவாக கௌதமின் நாயகர்கள் மெக்கானிக்கல் என்ஜினீயரிங்தான் படித்திருப்பார்கள்) பிரிஞ்சிடுவோம் என முடிவுக்கு வந்த ஜெஸ்ஸி தன்னை உருகி உருகி காதலித்த கார்த்தியிடமே இந்தக் கேள்வியை கேட்கும்போது அவன் எங்குபோய் விடை தேடுவான்.
வலியுடன் வீட்டுக்குள் சென்று தாழிட்டுக்கொள்ளும் ஜெஸ்ஸியிடம் எதும் கேட்காதவனாய் கடந்து செல்வான்..! வாய்ப்பு தேடி எதும் உணராத கோமா நிலையில் அதாவது உணர்வற்ற நிலையில் புது வீட்டின் வாசலில் கார்த்திக் வந்து நிற்கிறான்.
மெல்லிய காற்று வருடுவதைபோல் நீல நிற காட்டன் புடவையில் ஒரு தேவதை கடந்து செல்கிறாள். அவள் தன்னை நோக்கி வருவதை கூட உணர முடியாதவனாய் கார்த்திக் திகைத்து நிற்கிறான். தன்னை கடந்து தன் வீட்டின் கேட்டை தாண்டி செல்லும் ஜெஸியை கண்ணிமைக்காமல் பார்க்கிறான்.
அவ்வளவுதான். தலைக்கு மேல் இருக்கும் சூரியன் ஃபேட் அவுட் ஆக, காதலில் விழுகிறான். ரோம் வரை சென்று மறு இதயத்தையை உடைக்க கொடுப்பவனாய் கார்த்திக் மாறுகிறான்.
கேரளப் பெண், சினிமாவை பிடிக்காத கிறிஸ்தவ அப்பாவுக்கு பிறந்தவள், தன்னை விட மூத்தவள். அவளை திருமணம் செய்ய துளிகூட சாத்தியக்கூறு இல்லாத நிலையில் அவள் பின்னே செல்கிறான் கார்த்திக். அவள் காதலிக்கும் வரை காத்திருக்கிறான்.
இதுவரை அப்பா, அண்ணா தவிர ஆண்களிடம் அதிகமாகப் பழகாத ஜெஸ்ஸிக்கு தன்னை தேடி தேடி கேரளா வரை வந்து காதலிக்கும் கார்த்திக் விசித்திரமானவனாகவே தெரிகிறான். 'உன்ன பிடிச்சிருக்கு உன்கிட்ட அடிக்கடி பேசணும், பழகணும், ஆன லவ் மட்டும் வேணாம். என் அப்பா ஒத்துக்கவே மாட்டாரு' என்னும் ஜெஸ்ஸிதான் தனது திருமணத்தை நிறுத்திவிட்டு 'அப்பாகிட்ட நான் பேசறேன், உனக்காக வருவேன்' என்கிறாள்.
சினிமா, காதல் இரண்டையும் கார்த்திக்கால் விட்டுக்கொடுக்க முடியாது. ஒருமுறை இருவரும் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது, 'படம் பாக்கறியா? பிடிச்சிருக்கா இல்ல பேசலாமா?' என ஜெஸ்ஸி கேட்பாள். அதற்கு 'பிடிச்சிருக்கு... ஆனா பேசலாம்' என கார்த்திக் கூறுவான். சினிமாவையும் ஜெஸ்ஸியையும் அவன் எவ்வளவு காதலிக்கிறான் என்பதற்கு இது ஒன்றே சாட்சி.
அவனுக்கு துணை இயக்குநராக பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும்போதுகூட அவளின் அழைப்பை சிறிது யோசித்துவிட்டு துண்டிப்பான். தனது அப்பாவின் முடிவுக்காக காத்திருந்த ஜெஸ்ஸி நொடி பொழுதில் அவனுடன் போய்விடலாம் என்று எண்ணும் நேரத்தில் அவள் அழைப்பை கார்த்திக் துண்டித்ததுதான் அவன் தேர்ந்துகொண்ட முடிவு... சினிமாதான் என்று.
அதன் பிறகு அவன் அவளை தேடிபோய் பேசியதும் 'அந்த நொடி போய்டுச்சி கார்த்திக்' என ஜெஸ்ஸி கூறுவாள். ஒருவேளை ஜெஸ்ஸிதான் முக்கியமென அழைப்பை எடுத்திருந்தால் அவனால் சிறந்த இயக்குநராக வரும் வாய்ப்பு இல்லாது போயிருக்கும். இந்த வலியிலும் கிடைத்த வழி அது.
இதுவரை கௌதம் மேனன் இயக்கிய மிகச்சிறந்த படங்களில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' சிறந்தப் படமாக இருக்கும். இதன் பிறகு அவரே இதுபோன்ற படத்தை இயக்க நினைத்தாலும் அது சாத்தியமா என்பது சந்தேகமே.
இதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலாவது சிம்பு. தமிழ் சினிமா ஆயிரம் கார்த்திக்குகளை சந்தித்திருக்கும்... ஆனால் கார்த்திக் என்றாலே நம் நினைவுக்கு வருவது சிம்பு மட்டும்தான். இப்படி ஒரு பாத்திரப் படைப்பை இவ்வளவு கச்சிதமாக செய்து முடித்து சமகால ஹீரோக்களுக்கு சவால் விட்டார் சிம்பு.
இரண்டாவது திரிஷா. ஜெஸ்ஸியின் அந்த குழப்பமான பாத்திரம், லைட் மேக் அப், நடை என ஒவ்வொன்றிலும் அழகை கவிதையாய் கடத்தியிருப்பார். நடிப்பிலும் கூட.
மூன்றாவது ஏ. ஆர். ரகுமானின் இசை. ஆரோமோலே.., விண்ணைத்தாண்டி வருவாயா.. ஒமனப் பெண்னே.. மன்னிப்பாயா என ரசிகர்களை வேறு உலகிற்கு கொண்டு சென்றிருப்பார்.
அதிலும் தாமரையின் வரிகள் காதல் ரசம். பருக பருக ஆனந்தம். தாமரையின் வரிகள் ரகுமான் இசையோடு சேர்ந்து ஒரு மேஜிக்கை படம் நெடுகிலும் நிகழ்த்தியது.
படத்தின் ஒளிப்பதிவுக்கு ஆயிரமாயிரம் அப்லாஸ் (கைதட்டல்) கொடுக்கலாம். பார்த்து பார்த்து ஒவ்வொரு காட்சியையும் மனோஜ் செதுக்கியிருப்பார்.
கார்த்திக், ஜெஸ்ஸியை இவ்வளவு அழகாக காட்டிய பெருமை அவரையே சாரும். படத்தில் ஆர்ட் வொர்க்கிற்கும் மெனக்கெட்டு இருக்கிறது படக்குழு.
படத்தில் ஸ்பெஷலாக குறிப்பிடப்பட வேண்டிய ஒரு நபர் என்றால் விடிவி கணேஷ். புகழ் பெற்ற சினிமா விமர்சகர் பரத்வாஜ் ரங்கன், விடிவி கணேஷை சிம்புவுக்கு கார்டியன் ஏஞ்சல் என குறிப்பிடுவார். கார்த்திக்கின் வேலையிலும் சரி, காதலிலும் சரி அவனுக்கு நல்லதொரு வழிகாட்டியாய் வரும் கதாப்பாத்திரம் விடிவி கணேஷுக்கு.
இறுதியாக கௌதம் மேனன்...
இன்றுவரை சினிமா ரசிகர்கள், ஏன் கலை திரைப்படங்களை ரசிக்கும் நபர்கள் கூட இந்தத் திரைப்படத்தை ரசிக்கும் வண்ணம் காதலை, அதன் ஆழத்தை, அதன் வலியை நம்மோடு கடத்தியிருப்பார் (மீள்வது கடினம்).
காதலியின் பாதங்களை காதலன் வருடுவதை கௌதமின் பல படங்களில் நாம் கண்டாலும் 'மன்னிப்பாயா' பாடலில் பைக்கில் அமர்ந்த ஜெஸ்ஸியின் பாதங்களை கார்த்திக் வருடும் அந்த ஃபிரேம் பலராலும் மறக்கமுடியாதது.
ஒரு நொடிப் பொழுதில் விழும் காதலில் இருந்து மீள ஆயுள் கூட பத்தாது. அதைதான் இந்தப் படமும் நம்மிடம் உணர்த்திப்போகும்.
விண்ணைத்தாண்டி வந்த இரு காதலர்கள் இணைந்ததை போன்றதொரு கிளைமேக்ஸ், பிரிந்த வலியில் வாழும் காதலர்களுக்காய் ஒரு கிளைமேக்ஸ் என இரண்டு கிளைமேக்ஸையும் வைத்த கௌதமுக்கு ஒரு கைக்கொடுத்துவிட்டு நாமும் காதலில் விழு(மீள்)வோம்...
இதையும் படிங்க: இவன் காதலின் ரசிகன் - HBD Gautham Vasudev Menon