கரோனா தொற்று அச்சம் காரணமாக மார்ச் மாதம் இறுதியிலிருந்து தற்போது வரை இந்தியா முழுவதும் அனைத்து வித படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதனை நம்பியிருந்த பல தினக்கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இவர்களுக்கு திரை பிரபலங்கள் பலர் தங்களால் முடிந்த நிதியுதவியும் பொருளதவியும் வழங்கினர்.
அந்த வகையில் தெலுங்கு திரையுலகின் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி 'கரோனா க்ரைசஸ் சாரிட்டி' (Corona Crisis Charity) என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் நிதி திரட்டி உதவி வருகிறார். இதற்கு தெலுங்கு முன்னணி நடிகர்கள் நிதியுதவி அளித்தனர்.
தற்போது தமிழ், மலையாளம் திரையுலகில் இறுதிக்கட்டப் பணிகள் தொடங்க அரசு அனுமதியளித்துவிட்டது. இதனால் தெலுங்கு சினிமாவில் இறுதிக்கட்டப் பணிகள் எப்போது தொடங்கும் என சிரஞ்சீவி வீட்டில் ஆலோசனைக் கூட்டம் இன்று (மே 21) நடைபெற்றது.
இதில், முன்னணி தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், தில் ராஜூ, இயக்குநர்கள் ராஜமெளலி, த்ரி விக்ரம், கொரட்டலா சிவா உள்ளிட்டோருடன் தெலங்கானா அமைச்சரும் கலந்துகொண்டார்.
இந்தக் கூட்டத்தில் இறுதிக்கட்டப் பணிகள் நாளை (மே 22) முதல் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (மே 21) மாலை வெளியாகவுள்ளது. படப்பிடிப்புகள், திரையரங்குகள் திறப்பு உள்ளிட்டவை குறித்து தெலுங்கு திரையுலகினர் ஒன்றிணைந்து எப்படி பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்தப்படும் என வீடியோ எடுத்து அரசிடம் அனுமதி வாங்க முயற்சி செய்து வருகின்றனர்.
தெலுங்கு முன்னணி நடிகர்கள் நேரடியாக களத்தில் இறங்கியதால் நல்ல பலன் கிடைக்கும் என திரையுலகம் எதிர்பார்க்கிறது.