என்.டி.ராமாராவ் வாழ்க்கையை மையமாக வைத்து ஜனவரியில் ‘என்.டி.ஆர். கதாநாயகடு’ என்ற படமும், இதன் இரண்டாம் பாகமாக ’என்.டி.ஆர். மகாநாயகடு’ என்ற படமும் வெளிவந்தன. இதில் என்.டி.ராமராவ் வேடத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணா நடித்திருந்தார்.
இரண்டு படங்களையும் அதிக பொருட்செலவில் படமாக்கி இருந்தனர். ஆனால் எதிர்பார்த்த வசூல் இல்லாமல் நஷ்டம் அடைந்தது. இப்படத்தில் என்.டி.ராமாராவின் இரண்டாவது மனைவி லட்சுமி பார்வதி சம்பந்தமான காட்சிகள் இல்லை.
இந்நிலையில், சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மா, தன் மனைவி லட்சுமி பார்வதி கதையை தொகுத்து ‘லட்சுமி என்.டி.ஆர்’ என்ற பெயரில் புதிய படத்தை உருவாக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டீசரில் “துரோகம் செய்து விட்டனர், முதுகில் குத்திவிட்டனர்,” என என்டிஆர் கூறுவது போன்ற காட்சிகள் இருந்தன. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்து படமாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது ஆந்திராவில் 25 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ல் தேர்தல் நடக்க உள்ளது. அத்துடன் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது.
இந்நிலையில், இப்படம் தேர்தல் சமயத்தில் வெளியானால் தேர்தலை பாதிக்கும் என தெலுங்கு தேசம் கட்சியினரும், இது போன்ற படங்கள் தற்போது வெளியாவது தேர்தல் விதி முறைகளுக்கு புறம்பானது எனவும் காங்கிரஸ் கட்சியினர் கூறிவருகின்றனர்.
இதனையடுத்து, தேர்தல் கமிஷனுக்கு இரு கட்சியினரும் ஆந்திராவில் ஏப்ரல் 11-ல் தேர்தல் நடக்க உள்ளது. எனவே ‘லட்சுமி என்.டி.ஆர்’ படத்தை தேர்தல் காலத்தில் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதை போன்று பிரதமர் மோடி வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமான ‘பி.எம்.நரேந்திரமோடி’ படத்தை வெளியிடக்கூடாது என அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருவதும் குறிப்பிடதக்கது.