ஹாலிவுட்டில் 1989ஆம் ஆண்டு வெளியான 'டார்ஸான் இன் மேன்ஹட்டன்' என்னும் படத்தில் டார்ஸானாக நடித்தவர் ஜோ லாரா. இவர், 'அமெரிக்கன் சைபாக்: ஸ்டீல் வாரியர்', 'ஸ்டீல்ஃப்ராண்டியர்', 'ஹாலோக்ராம் மேன்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மேலும் 'டார்ஸான் தி எபிக் அட்வென்சர்ஸ்' என்னும் தொலைக்காட்சித் தொடரிலும் ஜோ லாரா நடித்துள்ளார்.
இந்நிலையில், மே 29ஆம் தேதி இரவு அமெரிக்காவின் டென்னசி விமான நிலையத்திலிருந்து ஃப்ளோரிடாவுக்கு சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் விமானி, நடிகர் ஜோ லாரா, அவரது மனைவி க்வென் லாரா உள்ளிட்ட 7 பேர் பயணம் செய்துள்ளனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நாஷ்வில் உள்ள பெர்சி பிரைஸ்ட் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அனைவரும் உயிரிழந்துவிட்டதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூத்தர் ஃபோர்ட் பகுதியிலிருக்கும் மீட்பு குழு இந்த தகவலை உறுதி செய்தது. தற்போது யாரும் உயிரோடு இருப்பதாக தாங்கள் கருதவில்லை என்றும், உடைந்த விமான பாகங்கள், அதில் பயணித்தவர்கள் உடல்களை தேடி வருவதாகவும் அக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், விமானத்தின் சில உடைந்த பாகங்களும், இறந்த மனிதர்களின் உடல் பாகங்களும் கிடைத்துள்ளாகவும் அவர்கள் தெரிவித்தனர்.