நெஞ்சுவலி காரணமாக சென்னை, வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார். அவரது மறைவுக்கு நடிகர்கள், திரைப் பிரபலங்கள் நேரிலும் சமூக வலைத்தளங்கள் மூலமும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், விவேக் மரணத்திற்கு தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சகோதரர் பத்மஸ்ரீ விவேக் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் சமுதாய சிந்தனைகளை மக்களிடம் எடுத்துச் சென்று மக்களால் ’சின்னக் கலைவாணர்’ என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.
சிறந்த சுற்றுச் சூழல் ஆர்வலராக பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்து இயற்கை வளங்களை பாதுகாத்துள்ளார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வைகை மண்ணின் மைந்தனும்... அப்துல் கலாம் காதலனும்!