திருச்சியில் செய்தியாளர்களிடம் நடிகர் எஸ்.வி. சேகர் கூறியதாவது:
பொதுப்பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வரும் 18 ஆம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது. இந்த விழா பிராமண சங்கங்களின் கூட்டமைப்பின் தென் மண்டலம் சார்பில் நடக்கிறது. நடிகர் சங்கம் சட்ட விரோதமாக ரூ.40 கோடி மதிப்புள்ள 5 கிரவுண்டு மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்துள்ளது. இதை திருப்பிக் கொடுக்க வேண்டும். இது தொடர்பாக தீர்ப்பு வந்துவிட்டதாக விஷால் கூறிய கருத்தில் உண்மை இல்லை. இன்னும் இந்த வழக்கில் தீர்ப்பு வரவே இல்லை.
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி 300 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக ஆட்சியில் அமருவார். முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை கூட்டணியில் வைத்துக்கொண்டு திமுக மதசார்பின்மை கூட்டணி என்று கூறுகிறார்கள். ஆனால் பாஜகவை இந்துத்துவா கட்சி என்று கூறுவது முற்றிலும் தவறானது. பிரதமராக மோடி பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரையில் நாட்டில் எங்குமே ஒரு மதக் கலவரமோ, மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமோ நடக்கவில்லை. அவரை பற்றி பொய்யான தகவலை திரும்பத் திரும்ப கூறி வருகின்றனர்.
திராவிடர் கழகத்தின் பேச்சை கேட்கும்வரை திமுக உருப்படாது. டிடிவி தினகரன் அசாத்திய துணிச்சலுடன் செயல்படுகிறார். இந்த தேர்தலில் டிடிவி தினகரனை விட கமலஹாசன் அதிக ஓட்டுக்களை வாங்குவார் என்பது எனது கணிப்பு. நீட் தேர்வை இனி நீக்கவே முடியாது. 7 பேர் விடுதலை என்பது சாத்தியமில்லை. 7 பேர் விடுதலை ஆனாலும் சரி, அனிதா தற்கொலை ஆனாலும் சரி இவற்றை வைத்து அரசியல் செய்யக் கூடாது, என்றார்.