ஞானவேல் இயக்கத்தில், 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சூர்யா நடித்துள்ள படம் 'ஜெய் பீம்'. இதில் ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு, நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 'ஜெய் பீம்' தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியானது.
இப்படத்தைப் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின், கமல்ஹாசன், இயக்குநர் பா.இரஞ்சித், தெலுங்கு நடிகர் நானி உள்ளிட்ட பலர் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பது குறித்தும், பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்னை குறித்தும் ஜெய் பீம் திரைப்படத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஜெய் பீம் திரைப்படம் வன்னியர் சமூகத்திற்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளதாக அன்பு மணி ராமதாஸ் சூர்யாவிற்கு கடிதம் எழுதினார். இதற்கு சூர்யா அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட 'பெயர் அரசியலுக்குள்' சுருக்க வேண்டாம் என்று பதில் அளித்தார்.
இந்நிலையில் சூர்யா வன்னியர் சமுதாயத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையெனில் அவரது திரைப்படம் எந்த தியேட்டர்களிலும் ஓட்ட முடியாது என மறைந்த காடு வெட்டி குருவின் மருமகன் மனோஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மனோஜ் கூறுகையில், " உண்மைக் கதை என கூறி வில்லனை வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் போல் ஜெய் பீம் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. இதில் இருளர் சமுதாயம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை காட்டும் படம் என சூர்யா கூறுகிறார்.
ராஜாக்கண்ணுவை கொலை செய்த காவல் ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி. ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு குரு என பெயர் வைத்து வன்னியர் சங்க தலைவர் குருவை நினைவுப்படுத்தும் வகையில், குரு என அழைத்து தமிழ்நாட்டில் வாழும் வன்னியர் மக்களை கொந்தளிக்க செய்துள்ளனர்.
வில்லனாக காட்டியுள்ள போலீசாரின் வீட்டில் வன்னியர் சங்க காலண்டரை தொங்க விட்டது ஏன்? குரு என பெயர் வைத்ததற்கு பதிலாக தீரன் சின்னமலை என பெயர் வைப்பாரா சூர்யா?
இதற்காக ஒட்டுமொத்த வன்னியர் சமுதாயத்திடம் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சூர்யாவின் எந்த படமும் இனி தியேட்டர்களில் திரையிட முடியாது. மீறி திரையிட்டால் தியேட்டரை கொளுத்துவோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: 'தனிநபரை அவமதிக்கும் நோக்கமில்லை' - அன்புமணிக்குப் பதிலளித்த சூர்யா