பிகார் மாநிலத்தைச் சேர்ந்த கணித ஆசிரியர் ஆனந்த்குமார் ஐஐடி நடத்தும் 'ஜேஇஇ' (JEE) என்னும் தகுதித் தேர்வுக்குப் பணம் கட்டிப் படிக்க முடியாத ஏழை மாணவர்களுக்கு இலவசமாகப் பயிற்சியளித்து அவர்களைத் தகுதி பெறச் செய்தார்.
இவரது வாழ்க்கையைப் படமாக எடுத்து ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியிட்டனர். இந்தப் படத்திற்கு ஆனந்த்குமார் உருவாக்கிய 'சூப்பர் 30' திட்டத்தையே தலைப்பாக வைத்தனர்.
ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான இந்தப் படம் மூன்று நாளில் 50 கோடி வசூல் ஈட்டியுள்ளது. பல்வேறு தரப்பினரும் படக்குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், ஆனந்த்குமார் பிகாரைச் சேர்ந்தவர் என்பதால் அம்மாநில அரசு 'சூப்பர் 30' படத்திற்கு வரிச்சலுகை அளித்துள்ளது. இந்த முடிவை பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் சுஷில் குமார் சேர்ந்து எடுத்ததாகக் கூறப்பட்டது. இந்தச் செயலுக்கு ஆனந்தகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பிகார் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அதில் அவர், "வரி விலக்கு அளித்த பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் சுஷில் குமார் ஆகிய இருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் இந்த முடிவால் நிறைய மக்கள் படம் பார்க்க உதவியாக இருக்கும்" என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
நடிகர் ரித்திக் ரோஷனுக்கு பல திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.