'பிரேமம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நன்கு பிரபலமானவர் நிவின் பாலி. இவர் இயக்குநர் ராமுடன் இணைந்து தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்கிறார். இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பானது ஜனவரி ஆரம்பத்தில் தொடங்கியது.
பெயரிடப்படாத இந்தப் படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். தற்போது அதில் நடிகர் சூரி இணைந்துள்ளார். இயக்குநர் மிஷ்கின் சமீபத்தில் இந்தப் படப்பிடிப்பு தளத்துக்குச் சென்றார். அங்கு அவர் படக்குழுவினருடன் எடுத்துக் கொண்ட படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
தற்போது படப்பிடிப்புத் தளத்திலிருந்து புகைப்படங்களைப் பகிர்ந்த சூரி, "இன்று இனியதொரு தொடக்கம். இயக்குநர் ராம், நிவின் பாலியுடன் முதல்முறையாக 'பயணிப்பதில்' பெரு மகிழ்ச்சி. சுரேஷ் காமாட்சிக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இத்திரைப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸின் கீழ் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். படத்தின் கதை ஒரு மீனவனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தோனி - விக்ரம் சந்திப்பு; பின்னணி என்ன?