சென்னை: 'கோலமாவு கோகிலா' பட வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'டாக்டர்'. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
இவர்களுடன் வினய், யோகி பாபு, அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்ஷன், கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
கரோனா பரவல் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதால் படத்தை ஓடிடியில் வெளியிட முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனால், ரசிகர்கள் படத்தை திரையரங்குகளில்தான் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து இப்படம் இன்று (அக்.9) திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர். இதற்கிடையில் நேற்றிரவு (அக்.8) கடன்களை காரணம் காண்பித்து படத்தை வெளியிடாமல் முடக்குவதற்கான வேலைகள் நடந்துள்ளது. இதனால் படம் சொன்னபடி வெளியாகுமா என ரசிகர்கள் அச்சப்பட்டனர்.
பின்னர் சிவகார்த்திகேயன் படத்தில் வாங்கும் பாதி சம்பளத்தைக் குறைத்துக் கொள்வதாகக் கூறி பிரச்சினையை முடித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், டாக்டர் திரைப்படம் இன்று (அக்.9) திரையரங்குகளில் வெளியானது குறித்து சிவகார்த்திகேயன் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "நாளை என்றும் நம் கையில் இல்லை, நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே என்றால்கூட போராடு நண்பா என்றைக்கும் தோற்காது உண்மைகளே..எதிர் நீச்சலடி வென்று ஏற்றுக் கொடி. இன்று முதல் திரையரங்குகளில் டாக்டர். நண்பர்கள், குடும்பத்துடன் படத்தைப் பார்த்து மகிழ்ச்சியடையுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அர்ஜுன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!