சென்னை: ஷ்ரத்தா ஶ்ரீநாத்தின் ‘கலியுகம்’ படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
கலியுகம் திரைப்படத்தை பிரமோத் சுந்தர் இயக்கவுள்ளார். இதற்காக சென்னையில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. விளம்பரத் துறையில் பணிபுரிந்து, சில குறும்படங்களை இயக்கியுள்ளார் பிரமோத் சுந்தர்.
ஷ்ரத்தா ஸ்ரீநாத் இப்படத்தின் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கவுள்ளார். இந்தப் படப்பூஜையில் அவருடன், படக்குழுவினரும் கலந்துகொண்டனர். இந்தப் படத்தை ஆர்.கே இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ப்ரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.எஸ். ராமகிருஷ்ணா பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். ஹாரர் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகிறது.
முன்னோக்கிய கதைக்களத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. இதில் கலை இயக்குநரின் பணி என்பது மிகவும் முக்கியமானது. இதற்காக பல்வேறு விஷயங்களை ஆராய்ச்சி செய்து, இந்தப் படத்துக்கு அரங்குகளைப் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார் கலை இயக்குநர் என்.சக்தி வெங்கட் ராஜ். ராம்சரண் ஒளிப்பதிவு செய்கிறார். நிமல் நாசீர் எடிட்டிங் செய்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![பூஜையுடன் தொடங்கிய ஷ்ரத்தாவின் ‘கலியுகம்’](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-07-kaliyugam-poojai-script-7205221_20012021181352_2001f_1611146632_3.jpg)