நடிகையும், தொழிலதிபருமான ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா இருவரும் 2019ஆம் ஆண்டிற்கான சேம்பியன் ஆஃப் சேஞ்ச் விருதினைப் பெற்றுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்த தூய்மை இந்தியா திட்டத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்ததற்காகவும், இத்திட்டத்தினை கடைப்பிடிக்கக்கோரி பொதுமக்களிடம் வலியுறுத்தியதற்காகவும் இந்த விருதினை இவர்கள் பெற்றுள்ளனர்.
இந்த விருதினை டெல்லியில் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து ஷில்பாவும் அவரது கணவரும் பெற்றுக்கொண்டனர்.
விருது குறித்து பேசிய ஷில்பா, ”இந்த விருதைப் பெறுவதில் நான் பெருமை அடைகிறேன். நமது நாட்டின் தூய்மையைப் பேணுவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். நமது வீட்டை நம்மால் தூய்மையாக வைத்துக்கொள்ள முடியும்போது, நாட்டின் தூய்மையை ஏன் பேண முடியாது?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், இந்த வருடம் தான் 480 மரங்களை நட்டுள்ளதாகவும், எதிர்கால சந்ததியினருக்காகவும், நமக்காகவுமேகூட மரங்களைப் பேணிப்பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்றும் ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, மாற்றங்கள் நம்மிடமிருந்துதான் தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், அறையை விட்டு வெளியேறும்போது ஸ்விட்ச்சுகளை அணைத்து மின்சாரத்தை சேமிக்க வேண்டியும், தண்ணீரை திறந்துவிட்டபடி பல்துலக்கும் பழக்கத்தைப் பின்பற்றுபவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது ஷில்பா ஷெட்டி ஹங்காமா 2, நிக்காமா ஆகிய திரைப்படங்களில் பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சூப்பர் சங்கி யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்