தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் காதல் படங்களில் தொடர்ச்சியாக நடித்துவந்த விஜய்யின் திரைப்பயணத்தில் அவரை கமர்சியல் ஹீரோவாக அடையாளம் காட்டியது திருமலை திரைப்படம்தான். அதன்பின் விஜய் கமர்சியல் சப்ஜெக்டிற்கு முக்கியத்துவம் அளிக்க ஆரம்பித்தார்.
இதனால் தமிழ்சினிமாவில் கமர்சியல் ஹீரோவாக உருவெடுத்திருந்த விஜய்யின் படங்களில் காமெடி, காதல், குத்துப்பாடல்கள், வில்லனுக்கு எதிரான ஆக்ஷன் காட்சிகள் என இந்த பாலிசியை பின்பற்றியே கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது.
இதனால் விஜய்யை புதிய பரிமாணத்தில் பார்க்க வேண்டும் என அவரது ரசிகர்களுக்கு தோன்றிய நேரத்தில் காவலன், நண்பன் என்ற திரைப்படங்களில் சற்று வேறு மாதிரியான கதாபாத்திரத்தில் தோன்றினார் விஜய். காவலன் காதல் கலந்த கமர்சியல் என்றாலும் கூட அதில் இடம்பெற்ற காதல் காட்சிகளில் சிறிது நேரம் பழைய விஜய் வந்துபோவார்.
அதன்பின் ஷங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் திரைப்படத்தில் ஒரு ஜாலியான ரோலில் தோன்றிய விஜய்யின் நடிப்பு மீண்டும் பாராட்டைப் பெற்றது. எனினும் அடுத்து விஜய் என்ன செய்யப்போகிறார் என்ற வேளையில் ஏ.ஆர். முருகதாஸ் முதன்முறையாக விஜய் உடன் கூட்டணி சேர்கிறார்.
இது புதிய கூட்டணி என்பதால் இம்முறை விஜய் எவ்வாறு இருக்கப்போகிறார் என்ற எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு துப்பாக்கி படத்தின் டீசரின் மூலம் பதிலளித்தார் இயக்குநர் முருகதாஸ். அதுவரை வந்த விஜய் படங்களில் ஒரு க்ளாஸான படத்தை பார்க்கப்போகிறோம் என்ற நம்பிக்கையையும் ரசிகர்களுக்கு ஏற்படுத்தினார்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்த இப்படத்தில் காஜல் அகர்வால், ஜெயராம், சத்யன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் நீண்ட வருடங்களுக்குப்பின் விஜய்யை ஒரு பாடலையும் பாடவைத்தனர். 2012 தீபாவளிக்கு வெளியான இத்திரைப்படம் ரிலீஸுக்கு முன் சில சிக்கல்களைச் சந்தித்தாலும், அத்திரைப்படம் விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை அளித்தது.
ஏனெனில் படத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் மெனக்கெட்டிருந்த இயக்குநர் முருதாஸ், விஜய் மீது சற்று கூடுதலாகவே கவனம் செலுத்தியிருந்தார். அதனாலேயே விஜய்யின் உடை, ஹேர்ஸ்டைல், மேனரிசம் என அனைத்திலும் விஜய்யை வேறு பாணியில் காட்டியிருந்தார். அதற்கு சந்தோஷ் சிவனின் கேமராவும் பெரிதும் உதவியிருந்தது.
துப்பாக்கி படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்திருந்த விஜய்யின் ஜெக்தீஸ் கதாபாத்திரமே பெரும்பாலான விஜய் ரசிகர்களின் பேவரைட் கதாபாத்திரம் என்று சொல்லலாம். காரணம் முந்தைய படங்களில் வில்லன்களிடம் நீண்ட வசனங்களைப் பேசி சவால் விடுத்த விஜய், இப்படத்தில் ' i am waiting' என்ற ஒற்றை வசனத்தின் மூலம் வில்லனை திணறடித்திருப்பார்.
இது தவிர படத்தின் தொடக்கத்தில் ராணுவ வீரர்கள் போர்க்களத்தில் அனுபவிக்கும் இன்னல்கள் குறித்து பேசிய அதே விஜய், ஏன் பிரச்னைனு வந்தா போலீஸ்காரனும், மிலிட்டரிகாரனும்தான் சண்டை போடனுமா என தன் தங்கையிடம் தெரிவிக்கும் காட்சிகள் ரசிகர்களுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்த தவறவில்லை.
இது தவிர படத்தில் பயங்கரவாத கும்பலின் ஊடுருவலை எதிர்த்து ஒற்றை ஆளாக போராடும் விஜய், ஏன் இதை செய்கிறார் என்ற கேள்விகள் ரசிகர்களுக்கு எழும், அதை விஜய்யின் நண்பராக நடித்திருந்த சத்யன் மூலமாகவே கேட்க வைத்திருப்பார் இயக்குநர்.
ஒருபுறம் வில்லன் வித்யூத் ஜம்வாலுக்கும் விஜய்க்குமான ட்ராக் சீரியஸாக போய்க்கொண்டிருக்க, மறுபுறம் காஜல் அகர்வாலுடன் காதல், தனது மூத்த அதிகாரியான ஜெயராமுடன் காமெடி என ஃபேமிலி ஆடியன்ஸின் எதிர்பார்ப்பையும் நிறைவு செய்திருப்பார்.
ஒட்டு மொத்தத்தில் விஜய்யின் திரைப்படங்களை துப்பாக்கி படத்திற்கு முன், அதற்கு பின் என பிரிக்கும் அளவிற்கு ஒரு பென்ச் மார்க்கை ஏற்படுத்தியதுதான் இத்திரைப்படத்தின் தனிச்சிறப்பு.
கோலிவுட்டின் ப்ளாக்பஸ்டராக மாறி துப்பாக்கி ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனையும் படைத்தது. காதல், கமர்சியல் நாயகனாக ஓடிக்கொண்டிருந்த விஜய்யை வேறு தளத்துக்கு கொண்டு சென்றது துப்பாக்கி. இப்படத்திற்குப்பின் கத்தி, சர்கார் என இரண்டு படங்களில் விஜய் - முருதாஸ் கைக்கோர்த்திருந்தாலும் இன்றளவும் விஜய் ரசிகர்கள் துப்பாக்கி இரண்டாம் பாகம் வேண்டும் என்றே கேட்கின்றனர். மெல்ல விடை கொடு விடை கொடு மனமே என்ற கடைசிப் பாடல் ஒலிக்கும்போது, பார்வையாளர்களும் திரையரங்கை விட்டு பிரிய முடியாமல்தான் விடை கொடுத்தனர். அந்த அளவு பார்வையாளர்களை ஈர்த்திருந்தது ‘துப்பாக்கி’.