"எனக்கு மட்டும்தான் அவ ஸ்லோ மோஷன்ல தெரியுறாளா மச்சான்?" என காதலியை பள்ளியில் தொலைத்துவிட்டு மீண்டும் கல்லூரியில் கண்டடைந்த வருணின் வரிகள்தான் இவை. இதைத்தொடர்ந்து வருணுக்கும் நித்யாவுக்குமான உறவு சிக்கல்களை, இருவரும் ஒன்றாக இருந்த தருணங்களை கூறும் கதைதான் ’நீதானே என் பொன்வசந்தம்’.
ஒரு ஆண் - பெண் இடையே இருக்கும் காதலுக்கும், ஈகோவுக்குமான மெல்லிய கோட்டினை உணர்வுப்பூர்வமாக இந்தத் திரைப்படம் சித்தரித்திருந்தது. படத்தில் உள்ள ஒரு காட்சியேனும் படத்தை பார்க்கும் ரசிகனை தன் பள்ளி காதலையோ, கல்லூரி காதலையோ நினைக்க வைத்தது.
வழக்கமாக விறுவிறுப்பான கமர்ஷியல் கதைக்களத்தையே ரசித்து வந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இதுபோன்ற மெதுவாக செல்லும் காதல் கதைகள் சற்று சலிப்பைதான் ஏற்படுத்தும். இந்தத் திரைப்படத்தின் திரைமொழி மெதுவாக நகர்ந்தாலும் ரசிகர்களுக்கு இப்படம் காதல், சுயநலம், ஈகோ, குடும்ப சுழல் என மாட்டிக்கொண்டிருக்கும் ஒரு சாதாரண குடும்பத்து பையனின் உணர்வுகளை கடத்திச்சென்றது.
இதற்கு முன்பாக கௌதம் மேனன் இயக்கிய 'வாரணம் ஆயிரம்', 'விண்ணைத்தாண்டி வருவாயா' போன்ற திரைப்படங்கள் காதலிக்காத ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தது. இந்தத் திரைப்படம் காதலிப்பவர்களின் மனதில், ஈகோவால் காதலை இழந்தவர்களின் மனதில் இடம் பிடித்தது.
இந்தத் திரைப்படத்திற்கு இளையராஜா மிகப்பெரிய தூண். கௌதம் படத்திற்கு இளையராஜா இசையா? என்று பலருக்கு கேள்வி எழுந்தது. ஆனால் இத்திரைப்படத்தின் ஒவ்வொரு பாடல் மூலம் ரசிகர்களிடம் புதிய இளையராஜா அறிமுகம் ஆனார். இளையராஜாவுக்கென்றே ட்ரிப்யூட்டாக இப்படத்தை செதுக்கினார் கௌதம் மேனன். படத்தின் அனைத்து பாடல்களும் இன்றைய ரசிகர்களின் டாப் ஃபேவரைட்டாகவே இருந்துவருகிறது. ஒவ்வொரு பாடலிலும் வருணுக்கும் நித்யாவுக்குமான உரையாடலை காட்சிபடுத்தியிருந்தார் கௌதம். இது ரசிகனுக்குள் தேங்கியிருந்த காதலை வெளிக்கொண்டு வந்தது
ஒரு காதல் நாவலை படிப்பதிலிருந்து கிடைக்கும் உற்சாகத்தை காட்சியின் பிம்பமாக பிரதிபலித்தது நீதானே என் பொன்வசந்தம். ஒவ்வொரு ஆணுக்கும் தன் கனவு காதலி இருந்திருப்பாள், ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு கனவு காதலன் இருந்திருப்பான். நிஜ வாழ்க்கையில் அப்படிப்பட்ட கனவு காதலரை சந்திப்பதற்கான சாத்தியக்கூறு குறைவாகவே இருக்கும். ஒருவேளை அப்படிபட்ட கனவு பாத்திரத்தை நாம் சந்தித்தால்? அந்த சந்திப்பு காதலாக மாறினால்? அப்படிப்பட்ட காதல்தான் வருணுக்கும் நித்யாவுக்குமானது. இருவரின் வெவ்வேறு வயதின் காலகட்டத்திலும் நடக்கும் உணர்வு பரிமாற்றம், உறவுச் சிக்கல், குடும்பப் பின்னணி, சூழல் என சாதி, மதம் கடந்த உளவியல் சிக்கல்கள் படத்தில் காட்சிபடுத்தப்பட்டிருக்கும்.
பள்ளிப் பருவம், கல்லூரி பருவம், நித்யா ஆசிரியையாக வருவது என மூன்று காலகட்ட காதலிலும் நித்யாவை பார்க்கும் முதல் பார்வையிலேயே, அந்த நொடியிலேயே மீண்டும் மீண்டும் காதலில் விழும் வருணை பார்க்கும்போது ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஒரு பெண்ணை ஒரு ஆண் பல விதமாக காதலிப்பார் என்பார்களே, அதன் இலக்கணம்தான் வருண். நித்யாவை காணும் அந்த சூழல்களில் பிரமிப்பில் மிரண்டு நிற்கும் வருணின் கண்கள் ஒரு உணர்ச்சிக் குவியல்.
கதையின் மையப்புள்ளியாக இருக்கும் நித்யா கதாபாத்திரத்தை அழகியலோடு பிரதிபலித்திருந்தார் சமந்தா. இந்தப் படத்தில் சமந்தாவின் நடிப்பு அவரது சினிமா வாழ்க்கையில் மைல் கல்லாக பார்க்கப்பட்டது. அந்தப் பாத்திரத்துக்காக பிலிம் ஃபேர் அவார்டையும் பெற்றார்.
டியூஷன் வருகையில் ஓடிவந்து கேஷுவலாக வருணுக்கு ஹாய் சொல்வது, சண்டை போட்டுவிட்டு செல்லும்போது, "வேற எதும் சொல்லாத வருண், போகாதனு சொல்லு" என மனதுக்குள் பேசுவது, வருணுக்கு வேலை கிடைக்கும்போது சற்றும் யோசிக்காமல் "நானும் உன்கூட கோழிக்கோடு வரேன்" என்று குழந்தைத் தனமாக சொல்வது என ரசிகர்களின் நினைவெல்லாம் நித்யா (சமந்தா). வருணுக்கு திருமணம் என அறிந்தவுடன் தன் சகோதரியிடம் "அவன் என்ன விட்டு போயிட்டான்" என அழும் சமந்தாவின் நடிப்பு அன்டர் ரேட்டடாகவே கருதப்பட்டது.
படத்தின் கூடுதல் பலமாக இருந்தது இளையராஜாவின் பாடல்களுடனான நா. முத்துக்குமாரின் வரிகள். படத்தின் காட்சிகளுடனும் அவரது வரிகள் ஒன்றிணைந்திருந்தது. குறிப்பாக பள்ளியில் வருணுடனான உரையாடலில் சமந்தா காதலோடு பார்த்து ஸ்டன்னாகி நிற்கும்போது, “அன்று பார்த்தது அந்த பார்வை வேறடி இந்த பார்வை வேறடி” என முத்துக்குமார் எழுதியிருந்தது வருணின் உணர்வுக் குவியல். காதலியிடம் உரிமையோடு மன்னிப்புக் கேட்கும்போது "அன்பே என்னை தண்டிக்கவும் புன்னகையில் மன்னிக்கவும் உனக்கு உரிமையில்லையா" என வருணின் அத்தனை ஈகோவையும் ஒரு வரியிலேயே உடைக்கும் சாதுரியம் முத்துகுமாரால் மட்டுமே முடிந்த ஒன்று.
எத்தனை முறை பார்த்தாலும் பழுதடைந்த நினைவுகளை தூசி தட்டி எழுப்பும் ஆற்றல் சினிமாக்களுக்கு அதிகமாகவே உண்டு. குறிப்பாக உடைந்த காதல் நினைவுகள், வெற்றி பெற்ற காதல் கதைகள், எதிர்நோக்கியிருக்கும் காதல் கனவுகள் என அத்தனை எண்ணங்களையும் கடத்திச் செல்லும் படமாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் இந்த பொன்வசந்தம்.
இதையும் படிங்க: கவனத்தை ஈர்க்காத கோலிவுட்டின் மாற்று சினிமா 'இரண்டாம் உலகம்'! #6yearsofIrandamUlagam