நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை வாழ்த்தியும் பாராட்டியும் இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 'காக்கா முட்டை' படத்தில் தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் அனைவராலும் பாராட்டப்பட்டவர். அதையடுத்து தர்மதுரை, வடசென்னை, சாமி ஸ்கொயர், செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்களிலும் சிறப்பாக நடித்தார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து , இந்தத் திரைப்படம் தெலுங்கில் 'கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மட்டும் வரமால், அனைத்து தரப்பு ரோல்களையும் செய்து வருகிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'நம்ம வீட்டுப்பிள்ளை' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்தார். அதே போல் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் 'வானம் கொட்டட்டும்' திரைப்படத்திலும் விக்ரம் பிரபுவுக்கு தங்கையாக நடித்து வருகிறார். 'ஐஸ்வர்யா ராஜேஷ்' சமீபத்தில் இயக்குநர் சீனு ராமசாமிக்கு வாழ்த்துகள் தெரிவித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் இயக்குநர் சீனு ராமசாமி, தனது ட்வீட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பைப் பாராட்டியும் வாழ்த்தியும் ட்வீட் செய்துள்ளார். அதில், 'கலைச்செல்வியாக இடம் பொருள் ஏவல். அன்புச்செல்வியாக தர்மதுரை. இந்திய சினிமாத்துறையின் இயல்பான நடிகை. எளிமை, அன்பான உள்ளம், இத்தனை ஆண்டுகளாக மாறாமல் அப்படியே இருக்கிறாய். நன்றி மா' என்று கூறியுள்ளார். இதற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.
இதையும் வாசிங்க: எனக்குக் கல்யாணமா... அது எப்போ..! டாட் வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!