சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இத்திரைப்படம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அதில், “அன்புத்தம்பி சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படத்தைக் கண்டுகளித்தேன். மாறுபட்ட திரைக்கதையோட்டமும், விறுவிறுப்பு குறையாத காட்சியமைப்புகளும் படத்தோடு நம்மை ஒன்றச்செய்து, மிகவும் ரசிக்கும்படியாகத் திரைப்படத்தை நகர்த்திச் செல்கிறது.
மதத்தால் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி சமகாலத்தில் ஆளும் வர்க்கத்தால் நாளும் அரங்கேற்றப்படும்போது, அதனை வெகுமக்களுக்கு உணர்த்தி விழிப்பூட்டும் சுவைமிக்கக் கலைப்படைப்பாக இத்திரைப்படத்தைத் தந்திருக்கிறார் தம்பி வெங்கட்பிரபு.
இஸ்லாமிய மக்கள் குறித்துப் பரப்பப்படும் கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாகி, கோவை கலவரத்தில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் போகிறபோக்கில் பேசி, அவர்கள் குறித்துப் பொதுப்புத்தியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் தவறானப் பிம்பத்தை தகர்த்தெரியும் விதத்திலான வசனங்களையும், காட்சிகளையும் படத்தின் கருப்பொருளாக அமையச் செய்திருப்பது இத்திரைப்படத்தின் சிறப்பம்சமாகும்.
சொல்ல வந்த செய்தியை மிகச்சரியாகக் காட்சிப்படுத்தி, அதனைத் திரைமொழியில் மக்களுக்கு விருந்தாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ள தம்பி வெங்கட்பிரபுவின் கலைத்திறன் இத்திரைப்படத்தின் மூலம் மென்மேலும் மெருகேறியிருக்கிறது.
எனது தம்பி சிலம்பரசன் அவர்கள் தனது துடிப்பான நடிப்பாற்றலாலும், மக்களின் மனம்கவரும் வகையிலான தனித்துவமிக்க திரைமொழி ஆளுகையினாலும், நுட்பமான உடல்மொழியாலும், உயிரோட்டமான வசன உச்சரிப்புகளாலும் மீண்டுமொரு முறை முத்திரைப் பதித்திருக்கிறார்.
கலையுலகப் பயணத்தில் அவரது வளர்ச்சி குறித்து பெரும் அக்கறைகொள்கிறேன்! அவரது உயரத்தை எண்ணி மன மகிழ்வடைகிறேன்!
அன்புச் சகோதரன் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் எதிர்மறை கதாபாத்திரத்தைத் தாங்கியிருந்தாலும் தனக்கே உரித்தான மொழி நடையாலும், எவரையும் சுண்டியிழுக்கும் வகையிலான அளப்பெரும் நடிப்புத்திறனாலும் படத்தினையே தாங்கி நிற்கிறார்.
அவர் திரையில் தோன்றும் காட்சிகள் யாவற்றையும் பெரிதும் விரும்பி ரசித்தேன்! தம்பி யுவன் சங்கர்ராஜாவின் பலமிக்க பின்னணி இசையும், தம்பி கே.எல்.பிரவீண் நேர்த்தியான படத்தொகுப்பும் படைப்புக்குப் பெரிதும் துணைநிற்கின்றன.
இத்திரைப்படத்தில் நடித்த அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், ஐயா ஒ.ஜி.மகேந்திரன், தம்பி மனோஜ் பாரதிராஜா, தம்பி சுப்பு அருணாச்சலம், தம்பி பிரேம்ஜி அமரன், தம்பி கருணாகரன், தங்கை கல்யாணி பிரியதர்ஷன் என யாவரும் தங்களது பங்களிப்பினைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
பெரும் சிரமங்களை எதிர்கொண்டபோதும் சற்றும் தளராது நின்று வென்றுகாட்டி, வெற்றிப்படைப்பாக நிலைநாட்டிய ஆருயிர் இளவல் எனது பாசத்திற்குரிய தம்பி சுரேஷ் காமாட்சி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
மண்ணுக்கும், மக்களுக்கும் தேவையான இன்னும் பல பல படைப்புகளைத் தந்து, அவர் மென்மேலும் வளர்ந்து உச்சம் தொட வேண்டுமென எனது வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவிக்கிறேன்!
எனது தம்பிகள் தங்களது அயராத உழைப்பின் மூலம் ஈட்டிய அளப்பெரும் வெற்றியைக் கண்டு உள்ளம்பூரிப்பு அடைகிறேன்!
நானே வெற்றிபெற்றதாக எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்! இப்படைப்புக்காக உழைத்திட்ட அத்தனை பேருக்கும் எனது வெற்றி வாழ்த்துகளையும், உளப்பூர்வமான பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்!” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் பொதுவெளியில் திரையிடப்பட்ட 'ஜெய் பீம்'