பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் இன்று திரைக்கு வந்தது. இதையொட்டி பட்டுக்கோட்டையில் மூன்று திரையரங்குகளில் இந்தப் படம் வெளியிடப்பட்டும் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.
இந்நிலையில் பட்டுக்கோட்டை ஒன்றிய விஜய் ரசிகர் மன்றத்தினர் விஜய் நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் பல லட்சம் ரூபாய் செலவு செய்து கட்-அவுட், மேளதாளங்கள் என அமர்க்களப்படுத்துவது வழக்கம்.
தற்போது சுபஸ்ரீ மரணத்திற்கு பிறகு பேனருக்கு விதிக்கப்பட்ட தடையை மனதில்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் பேனருக்கு செலவு செய்யும் தொகையைக் கொண்டு ஏதாவது பயனுள்ள ஒன்றை சமூகத்திற்குச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் விஜய் ரசிகர்கள் ஒரு திட்டத்தில் இறங்கியுள்ளனர்.
கஜா புயலில் மரங்கள் பல சேதமடைந்து இயற்கை பாதிப்பு உண்டாகியுள்ளது என்பதை மனதில்கொண்டு ஐந்தாயிரம் விதைப் பந்துகளை படம் பார்க்கவரும் பார்வையாளர்களுக்கு வழங்கிவருகின்றனர். இனிவரும் ஒவ்வொரு விஜய் திரைப்பட வெளியீட்டிற்கும் இதுபோல ஏதாவது சமூகத்திற்குத் தேவையான உதவியைச் செய்வோம் என உறுதி பூண்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஜார்ஜ் ரெட்டி வெளியாகும் தேதி அறிவிப்பு