'நேம் இஸ் பாண்ட்.... ஜேம்ஸ் பாண்ட்' என்ற வசனத்தைக் கேட்டாலே ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள். உலகம் முழுவதும் தனக்கென பல கோடி ரசிகர்களை பாண்ட் வைத்துள்ளார்.
'ஜேம்ஸ் பாண்ட்' திரைப்படம் பல்வேறு சீரிஸாக வெளியாகியுள்ளது. இப்படம் ஒரு கற்பனை உளவாளியை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டிருக்கும். படத்தில் கற்பனை உளவாளியாக வருபவர்தான் ஜேம்ஸ் பாண்ட்.
இந்த ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் புத்தகங்களாகவும் வெளியாகின. 1952ஆம் ஆண்டு அயன் பிளெமிங் என்பவரால் உருவாக்கப்பட்டவர்தான் ஜேம்ஸ் பாண்ட்.
இது திரைப்படமாக 1962ஆம் ஆண்டு ஷான் கானரி நடிப்பில் 'டாக்டர் நோ' என்னும் பெயரால் தொடங்கியது. இந்தக் கதாபாத்திரத்தை மையமாக வைத்து தற்போதுவரை 25 திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் முதன்முதலாக நடித்த நடிகர் ஷான் கானரி (90) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். இவர் ஏழு ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்துள்ளார்.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இவர் ஆஸ்கர், பாஃப்தா, கோல்டன் குளோப் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகளை பெற்றுள்ளார்.