சென்னை: “நடிகர் சங்க விவகாரத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம். தேர்தல் விவகாரத்தில் பழைய வாக்குகளை எண்ணினாலும் சரி, புதிதாக தேர்தல் நடத்தினாலும் சரி, நாங்கள் சந்திக்கத் தயாராக உள்ளோம்” என்று சுவாமி சங்கரதாஸ் அணியினர் சென்னையில் பேட்டிளித்தனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம் தொடர்பாக சுவாமி சங்கரதாஸ் அணியினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அந்த அணியைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஐசரி கணேசன் கூறியதாவது:
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தில் நீதிமன்றம் ஒரு மாத காலத்துக்கு அவகாசத்திற்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது. தேர்தலைப் பொறுத்தவரை விஷால் தரப்பினர் தேர்தலுக்குப் பயந்து மேல்முறையீட்டு வழக்குகளைத் தொடர்ந்து வருகின்றனர். எங்களைப் பொறுத்தவரை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணினாலும் சரி அல்லது புதிதாக தேர்தல் நடத்தினாலும் சரி சந்திக்கத் தயாராகவே இருக்கிறோம்.
தேர்தல் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அலுவலர்களிடம் விஷால் தரப்பினர் எந்த ஆவணங்களையும் இதுவரை ஒப்படைக்காமல் இருக்கின்றனர். நடிகர் சங்கத்தில் மொத்தம் 600 பேர் ஓய்வூதியம் வாங்கி வருகிறார்கள். இதில் 150 பேருக்கு நான் ஓய்வூதியம் கொடுத்து வருகிறேன். மீதமுள்ள 450 பேர் தேர்தலில் நடைபெறாமல் இருப்பதால் ஓய்வூதியம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இதனால், அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதற்காக வழிசெய்ய வேண்டும். இல்லை என்றால் அவர்களுடைய முகவரியைக் கொடுத்தால் நாங்கள் ஓய்வூதியம் வழங்க தயாராக இருக்கிறோம்.
நந்தனத்தில் உள்ள முகவரிக்கு தொடர்பு கொண்டால் ஓய்வூதியம் அவர்களுக்கு கொடுக்கப்படும். நடிகர் சங்கத்தில் தற்போது கையிருப்பு பணம் எதுவும் இல்லாமல் இருப்பதால், ஓய்வூதியம் கூட வழங்க முடியாத அளவுக்கு எதிர் தரப்பினர் நிர்வாகம் செய்து வருகின்றனர் என்றார்.
இந்த சந்திப்பின்போது தயாரிப்பாளர் ஐசரி கணேசன், இயக்குநர் பாக்யராஜ், நடிகை சங்கீதா, நடிகர் சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.