தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இதனிடையே தனது பழைய காதல், கசப்பான அனுபவமாக அமைந்ததால் அதை முறித்துக் கொண்டதாக நடிகை சமந்தா கூறியுள்ளார். இது தொடர்பாக பிரபல தெலுங்கு நாளிதழுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது,
பழம்பெரும் நடிகை சாவித்ரி போல் எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளை சந்தித்துள்ளேன். ஆனால் அதை வெகு விரைவில் உணர்ந்துகொண்டு, அதிலிருந்து விலகியுள்ளேன். எனது பழைய காதல் ஒத்துவராது என்று முன்னரே உணர்ந்தேன். பின் உடனடியாக அந்த உறவை முறித்துக்கொண்டு வெளியேறிவிட்டேன். அது கசப்பான அனுபவம்.
இதன் பிறகு நாகசைதன்யா என் வாழ்க்கையில் வந்ததை ஆசீர்வாதமாக கருதுகிறேன். அவர் எல்லாவற்றிலும் சிறந்தவர் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தப் பேட்டியில் பேசிள்ளார் சமந்தா.
நாக சைதன்யாவை காதலிக்கும் முன்பு அவர் நடிகர் சித்தார்த்தை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இதை உறுதிபடுத்தும் விதமாக சமந்தா - சித்தார்த் இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜோடியாக வலம் வந்தனர். கோயிலுக்குச் சென்று இருவரும் இணைந்து பூஜையும் மேற்கொண்டனர்.
இதையடுத்து சில காரணங்களால் இருவரும் தங்களது உறவை முறித்துகொண்ட நிலையில், தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கினர். பின்னர் டாப் ஹீரோயினாக உருவெடுத்த சமந்தா, நாக சைதன்யாவை காதலித்தார். இதைத்தொடர்ந்து இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் திருமணம் செய்து கொண்டனர்.