எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜுனியர் என்டிஆர், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகியுள்ள படம், 'ஆர்.ஆர்.ஆர்'. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நேற்று (டிசம்பர் 27) நடைபெற்றது.
இந்நிகழ்வில் இயக்குநர் ராஜமௌலி, நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், பாடலாசிரியர் மதன் கார்க்கி, தயாரிப்பாளர் தாணு, தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். ராஜமௌலிக்காக வந்துள்ளேன். ராம் சரண், ஜூனியர் என்டிஆருக்கு வாழ்த்துகள். பாகுபலி சாதனைகளை முறியடிக்கும் என்று ராஜமௌலியிடம் கூறினேன். தென்னிந்திய சினிமாவிற்கு இப்படம் மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும்" என கூறினார்.
சிவகார்த்திகேயன் பேசுகையில், "ராஜமௌலியின் மிகப்பெரிய ரசிகன் நான். கனவுகளை அடைய நினைப்பவர்களுக்கு ராஜமௌலி ஒரு முன்னுதாரணம். படக்குழுவினரின் அசாதாரண உழைப்பு ஸ்கிரீனில் தெரிகிறது. இது ஒரு இந்தியன் படம். தென்னிந்தியா, வட இந்தியா எல்லாம் கிடையாது. கரோனா பரவலால் திரைத்துறை கடினமான சூழலை சந்தித்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கமே வலிமை, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்களின் வெளியீட்டால் திரைத்துறை மீண்டும் உயிர்பெறும். அனைவரும் திரையரங்கில் சென்று படத்தை பாருங்கள்" என்றார்.
ஜூனியர் என்டிஆர் கூறுகையில், "நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். ராஜமௌலிக்கு நன்றி. என் மீது நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரம் கொடுத்தற்கு நன்றி. ராம் சரணுடன் இணைந்து நடித்த ஒவ்வொரு காட்சியிலும் நான் மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறேன். மீண்டும் எனது நண்பன் ராம் சரணுடன் பணியாற்றிய நேரங்களை அனுபவிக்க காத்திருக்கிறேன்" என பேசினார்.
நடிகர் ராம் சரண் பேசுகையில், "ராஜமௌலிக்கு மிகவும் நன்றி. உங்களை பற்றி பேச இந்த மேடை பத்தாது. நான்தான் தமிழ் டப்பிங் பேச வேண்டும் என்று ராஜமௌலி சொன்னபோது பயமாக இருந்தது. மதன் கார்க்கி எனக்கு உதவி செய்தார். எல்லோருக்கும் நன்றி சொல்வேன். ஆனால் என்டிஆருக்கு சொல்ல மாட்டேன். என் மனதில் அவரை வைத்துள்ளேன். ரசிகர்களுக்கு நன்றி" என தெரிவித்தார்.
இயக்குநர் ராஜமௌலி, "சென்னை தான் எனக்கு எல்லாமே. இது பாடம் சொல்லி தந்த ஆசிரியர் போன்றது. எனது கனவு திரையில் கொண்டுவர பலருடைய உழைப்பு தான் காரணம். இதில் பணியாற்றியவர்களும், பான் இந்திய தொழில்நுட்ப குழுவினருக்கு நன்றி" என்றார்.
இதையும் படிங்க: வா சுல்தான் வா... மாஸ் காட்டும் கார்த்தி - ஏழரை கோடி பார்வைகள்