நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று (அக்.28) அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டனர். இந்தப் பரிசோதனையில், ரஜினிகாந்துக்கு ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக ரத்த குழாய்களில் படியும் கொழுப்பை கரைக்கும் ஆற்றலை உடல் இழக்கும்போது நெக்ரோசிஸ் (necrosis) எனப்படும் இந்த பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் ரஜினிக்கு ஏற்பட்டுள்ள ரத்த நாள பாதிப்பை சரி செய்யும் சிகிச்சையில் மருத்துவர்கள் ஈடுப்பட்டுள்ளதாகவும், நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப் படுகிறது.
இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ரஜினியை நடிகரும் உறவினருமான ஒய்.ஜி. மகேந்திரன் நேரில் சந்தித்தார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ஒய்.ஜி. மகேந்திரன் கூறுகையில், " ரஜினிகாந்தை நேரில் பார்த்தேன். அவர் அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு அளிக்கப்பட்டு கொண்டிருக்கும் சிகிச்சை பற்றி எனக்கு தெரியாது. தீபாவளிக்கு வெளியாக இருக்கும் 'அண்ணாத்த' திரைப்படத்திற்கு, அவர் மருத்துவமனையில் இருந்து வெளியாகி இருப்பார்” என்றார்.
இதையும் படிங்க: நானோ அல்லது என் மகளோ பள்ளியை நிர்வகிக்கவில்லை - ஒய்.ஜி. கொடுத்த ஜெர்க்!