நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'அண்ணாத்த'. நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.
தொடர்ந்து படப்பிடிப்புத் தளத்தில் ரஜினிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ஹைதராபாத்தில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய ரஜினி ஓய்வில் இருந்து வந்தார்.
முன்னதாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர், ஆண்டுக்கு ஒருமுறை அமெரிக்கா சென்று மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டு வருகிறார். அதன்படி கடந்த மாதம் ஜூன் 19ஆம் தேதி மத்திய அரசின் அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா சென்ற அவர், மூன்று வாரங்கள் கழித்து நாளை (ஜூலை.09) காலை சென்னை திரும்புகிறார்.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பும் ரஜினி, சில நாள்கள் ஓய்வு எடுத்துவிட்டு, மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் பாதி ஷூட்டிங் முடிந்த நிலையில், மீதம் உள்ள சில காட்சிகள் மட்டுமே படமாக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
’அண்ணாத்த’ திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக 25 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியின் 'முத்து' திரைப்படமும் தீபாவளியன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆர்யாவின் 'சார்பட்டா' வெளியாகும் தேதி அறிவிப்பு!