ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான நடனக்குழுவில் பயிற்சி பெற்றவர் பரத். இவர் சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் தனது நண்பர்களுடன் வசித்து வந்தார். இவர் ‘மின்சார கனவுகள்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஏ.ஆர். முருகதாஸ் உள்ளிட்ட சில திரைத்துறை பிரபலங்களின் குழந்தைகளுக்கு நடனப் பயிற்சி அளித்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு அவர் திடீரென தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்த சம்பவம் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது குழுவிரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரைத்துறையை சார்ந்தவர்கள் காதல், பணச் சிக்கல், வேலையில் மன அழுத்தம் என பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்கின்றனர். பரத் திரைத்துறையில் சாதிக்க முடியாத வருத்தத்தில் தன்னை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என கோலிவுட் வட்டாரம் தகவல் தெரிவிக்கின்றது. பரத் தூக்கிட்ட செய்தியை அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.