கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'மாறன்'. இப்படத்தில் தனுஷ் ஒரு பத்திரிகையாளராக நடித்துள்ளார். மாளவிகா மோகனன் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இயக்குநர் அமீர் முக்கியக் கதாபாத்திரத்திலும்; சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மாறனை கண்டுகொள்ளாத தனுஷ்
இத்திரைப்படம் வரும் வெள்ளியன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஆனால், தனுஷ் மட்டும் இப்படம் குறித்து கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. 'மாறன்' படத்தைத் திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்று தனுஷ் ஆசைப்பட்டுள்ளார். ஆனால், தயாரிப்பாளர் தரப்பு படத்தை ஓடிடி-யில் நல்ல விலைக்கு விற்றுவிட்டதால், தனுஷ் கடுப்பாகியுள்ளதாகவும் இதனால் தான் 'மாறன்' ப்ரோமோஷன் குறித்து அவர் கண்டுகொள்ளவில்லை என்றும் திரையுலகத்தில் பலரால் பேசப்படுகிறது.
அவர் எழுதி பாடியுள்ள பாடல் நேற்று வெளியான நிலையில் அதுகுறித்துகூட அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்யவில்லை. இதனால் படக்குழு பெரியளவில் அப்செட்டில் உள்ளதாம். முன்னதாக ’ஜகமே தந்திரம்’ படத்தையும் தியேட்டரில் வெளியிட நினைத்தார். ஆனால், அந்தப் படமும் ஓடிடி-யில் வெளியானதால் இந்தப் படமாவது தியேட்டரில் வெளியிடலாம் என்று நினைத்துள்ளார், தனுஷ். ஆனால், அப்படி நடக்காததால் அவர் இப்படி செய்வதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.
பாலிவுட்டிற்கு ஒரு நியாயம் கோலிவுட்டிற்கு ஒரு நியாயமா..?
ஆனால், பாலிவுட்டில் தனுஷ் நடித்த ’அத்ராங்கி ரே’ படமும் ஓடிடி-யில் தான் வெளியானது. ஆனால், அப்படத்தின் ப்ரோமோஷனில் மட்டும் முழுவீச்சில் ஈடுபட்டார், தனுஷ். இப்படி பாலிவுட்டிற்கு ஒரு முகம்; கோலிவுட்டிற்கு ஒரு முகம் காண்பிக்கும் தனுஷின் போக்கு தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதியையும் தாண்டி பலரையும் அதிருப்தி அடையச் செய்துள்ளது.