தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் சமீபகாலமாக ஒட்டிவரும் போஸ்டர்கள் சலசலப்பை ஏற்படுத்திவருகின்றன.
இவற்றில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசு விஜய்தான் என்ற தொனியில் எம்ஜிஆர் போன்று மார்பிங் செய்யப்பட்டு ஒட்டப்பட்ட விஜய்யின் போஸ்டர்கள், அதிமுக தரப்பினரை கொந்தளிப்பில் ஆழ்த்தியது.
இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கானாவிலக்குப் பகுதியில் நேற்று (செப்.10) நள்ளிரவில் விஜய் ரசிகர்கள் சார்பில் புதிதாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
ஆண்டிபட்டி ஒன்றியத் தலைமை விஜய் ரசிகர்கள் சார்பில் ஒட்டப்பட்ட இந்தப் போஸ்டர்களில், ”எலெக்சன் என்றாலும், கலெக்சன் என்றாலும் தளபதிதான்!” என்ற வாசகம் அச்சிடப்பட்டு இருந்துள்ளது.
மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் இந்தப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து தகவலறிந்து அங்கு சென்ற காவல் துறையினர் இரவோடு இரவோக இந்தப் போஸ்டர்களைக் கிழித்து எறிந்தனர்.
நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தைக் குறிக்கும்விதமாக அவரது ரசிகர்கள் இவ்வாறு தொடர்ந்து ஒட்டிவரும் போஸ்டர்கள் சலசலப்பை ஏற்படுத்திவருகின்றன.
இதையும் படிங்க : நடிகர் விஜய்யை புகழ்ந்து தேனியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு