தெலுங்கு சூப்பர் ஸ்டாரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிரஞ்சீவி, மற்றொரு பிரபல தெலுங்கு நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் ஆகியோர்களின் சகோதரர் நடிகர் நாகபாபு. இவர் தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்த நாதுராம் கோட்சேவை தேசபக்தர் எனக் குறிப்பிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், தேசத்தந்தையை சிறுமைப்படுத்தும் வகையில் பதிவிட்டதாகவும், தேசத் தந்தையை அவமானப்படுத்தியதற்காக உடனடியாக அவரைக் கைது செய்ய வேண்டியும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த் கே.மனவதா ராய் உஸ்மானியா பல்கலைக்கழக காவல் நிலையத்தில் நாகபாபு மீது புகார் அளித்துள்ளார்.
தெலங்கானா காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரான மனவதா ராய், நாகபாபுவின் ட்விட்டர் கருத்து ஆட்சேபகரமான உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதாகவும், சமூக வலைதளங்களில் இது பரவலாகப் பகிரப்பட்டு பல்வேறு தரப்பு மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்னும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்றும்; சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றும் உஸ்மானியா பல்கலைக்கழக காவல் கண்காணிப்பாளர் இது குறித்து தெரிவித்துள்ளார்.
மேலும், நாகபாபுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி, தெலங்கானா காவல் துறை தலைமை இயக்குநர் மகேந்தர் ரெட்டி, ஹைதராபாத் காவல் கமிஷனர் அஞ்சனி குமார் ஆகியோரிடமும் மனு அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ள நடிகர் நாகபாபு, கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் ஜனசேனா வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மீண்டும் வரும் ஜார்ஜ் குட்டி: 'த்ரிஷ்யம் 2' அதிகாரப்பூர்வ அறிவிப்பு