மது தெளித்த வார்த்தைகளால், மாதுவின் மடியில் மஞ்சமென தலை சாய்த்து படுத்திருக்கும் நினைவலைகளைக் கொண்டு வந்து நிறுத்தும் கவிஞர், கண்ணதாசன்.
இவர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள சிறுகூடல்பட்டி கிராமத்தில் 1927ஆம் ஆண்டு பிறந்தார். சாத்தப்பன் - விசாலாட்சி தம்பதியருக்கு, எட்டாவது குழந்தையாகப் பிறந்த இவருக்கு 'முத்தையா' எனப் பெயர் சூட்டப்பட்டது.
தத்து கொடுக்கப்பட்ட கண்ணதாசன்
பின்னர் காரைக்குடியைச் சேர்ந்த பழனியப்பன் - சிகப்பி தம்பதிக்கு 7 ஆயிரம் ரூபாய்க்கு, அவரது பெற்றோர்களால் தத்து கொடுக்கப்பட்டார்.
தனது ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர் நிலைப்பள்ளியில் எட்டாவது வரையிலும் படித்தார், கண்ணதாசன். எழுத்தின் மீது பிறந்த ஆர்வத்தால், சிறு வயதிலேயே புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினார்.
பின்னாளில் பத்திரிகைகளில் கதை எழுத வேண்டும் என்பதே, அவரது கனவாக மாறிப் போனது. அதன்படி தனது கனவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு, தனது 16ஆவது வயதில் வீட்டிற்குத் தெரியாமல் சென்னை சென்றடைந்தார், கவியரசர்.
திரைப்படங்களில் வாய்ப்புத் தேடி அலைந்து, திரிந்த கவிஞனை பசியும், எதிர்காலம் குறித்த கவலையும் வாட்டி வதக்கியது.
செய்வதறியாது உழன்று திரிந்த கண்ணதாசனுக்கு, அந்தக் காலத்தில் வெளிவந்த 'திருமகள்' பத்திரிகையில் பிழைதிருத்துநராகப் பணி கிடைத்தது. அதன் பின்னர் கவிஞன் கண்ட திசையெல்லாம் ஏறுமுகம்தான்.
வாய்ப்பை முன்னேற்றத்துக்குப் பயன்படுத்திய கவியரசர்
பணியிலிருந்த தருணத்தில் ஓர் நாள் அவருக்கு கிடைத்த 'தலையங்கம்' எழுதும் வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டதன்மூலம், அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள் பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்து ஜொலிக்கத் தொடங்கின.
தனக்குக் கிடைத்த இந்த அடையாளத்தால், சினிமாவுக்குப் பாட்டு எழுதும் பயணத்தில் காலடி எடுத்து வைத்தார், கண்ணதாசன். கவிஞனுக்கு காலம் கைகொடுக்க 1949ஆம் ஆண்டு கே.ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த 'கன்னியின் காதலி' திரைப்படத்தில், 'கலங்காதிரு மனமே; உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே' என்று அவர் எழுதிய பாடல் வெளியாகி, பிறை சூடிய மலராய் பிரபலமானது.
இல்லறவாழ்வில் தடம்பதித்த கண்ணதாசன்
கட்டிளம் காளையென திரிந்த கண்ணதாசனுக்கு இல்லற வாழ்வெனும் கால்கட்டு 1950ஆம் வருடம் பூட்டப்பட்டு, மூன்று துணைவியர்களை மணந்த பின்னும் இனிமையுறவே திகழ்ந்தது. அதன் பின்னர் தன் மனம் போலவே, 15 மக்கட்பேறை தாராளமாய் தரணிக்கு அள்ளிக் கொடுத்தார்.
1953ஆம் ஆண்டு திமுக நடத்திய டால்மியாபுரம் போராட்டத்தில் பங்கேற்றதன் காரணமாக, ஒரு ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்தார், கண்ணதாசன்.
எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த 'மன்னாதி மன்னன்' படத்தில் இடம்பெற்ற 'அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா' எனும் தீப்பிழம்பு தெறிக்கும் பாடல் வரிகளால் தமிழ்த்திரை ரசிகர்களை கிட்டத்தட்ட 30 ஆண்டுகள், கட்டிப்போட்டவர், கண்ணதாசன்.
தனது நண்பரும், இசையமைப்பாளருமான எம்.எஸ்.விக்கும், தனக்குமிடையே வந்த ஊடலை விளக்கும் பொருட்டு எழுதிய, 'சொன்னது நீதானா? சொல்.சொல். என்னுயிரே' பாடலால் நட்பின் பெருமையை உலகறியச் செய்தவர்.
கல் தோன்றி, மண் தோன்றிய காலத்திலிருந்து இருக்கும் காதலில் தோற்றவர்களின் மனதுக்கு ஆறுதல் தரும் 'எங்கிருந்தாலும் வாழ்க' எனும் பாடலால் காளையர்கள் மனதில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்திட்ட கவி மன்னன் கண்ணதாசன். தன் சூழ்நிலையை ஒப்பிட்டு பாடல் வடிப்பதில் கண்ணதாசனுக்கு நிகர், அவர் மட்டுமே.
இவ்வளவு புகழுக்கும் சொந்தக்காரரான, கவிஞர் கண்ணதாசன் உடல்நலம் பாதிக்கப்பட்டு அக்டோபர் 17, 1981ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
தான் இயற்றிய பாடல்களால், மக்கள் மனதில் மன்னராய் வீற்றிருந்த கவியரசரின் 94ஆவது பிறந்த நாளான இன்று (ஜூன்.24), அவரைப் போற்றும் விதமாக #HappyBirthdayKannadhasan என்ற ஹேஷ்டேக் மூலம் கண்ணதாசனைப் போற்றி, அவரது ரசிகர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : இந்திரா காந்தியான தலைவி!