சென்னை: பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் (Positive Print Studios) சார்பில் ராஜேஷ் குமார், எல்.சிந்தன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’. இப்படத்தை ‘பானா காத்தாடி’ புகழ் பத்ரி வெங்கடேஷ் இயக்கிவுள்ளார். இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் ரியோ நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் பால சரவணன், ரோபோ ஷங்கர், தங்கதுரை ஆகியோர் காமெடி வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் செப்டம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது. இந்நிலையில், படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
![பிளான் பண்ணி பண்ணனும்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13108818_rio.jpg)
வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்
நடிகர் ரியோ ராஜ் பேசுகையில், ”பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் அனைவரும், இப்படத்திற்கு உங்கள் முழு ஆதரவையும் தந்து வெற்றிப்பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இப்படத்தில் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் பணியாற்றினோம்.
எனது படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது, எனது கனவுகளில் ஒன்று, அது இப்போது நனவாகியிருக்கிறது. கோவிட் தடங்கல்கள் எத்தனை வந்தாலும் அந்த இன்னல்களை தாண்டி, இத்திரைப்படம் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் என்றார்.
திரையரங்குகளில் படங்களை பார்க்க வேண்டும்
நடிகை ரம்யா நம்பீசன் பேசுகையில், ”மீண்டும் திரையரங்குகள் செயல்பட ஆரம்பித்துள்ளது, எங்கள் குழுவில் அனைவருக்கும் மிகப்பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. திரையுலகில் இது அனைவருக்கும் கடினமான காலமாக இருந்தது. இந்த லாக்டவுன் காலகட்டத்தில் ஓடிடி தளங்கள் சினிமாவுக்கு மிகப்பெரும் ஆதரவாக இருந்தது.
அனைவரும் திரையரங்குகளில் படங்களை பார்க்க வேண்டும். அப்போதுதான் சினிமா வளரும். இத்திரைப்படத்தை நீங்கள் அனைவரும் திரையரங்குகளில் பார்த்து, ஆதரவை தர வேண்டும்” எனக் கூறினார்.
![ரம்யா நம்பீசன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-ppp-rio-script-7205221_19092021090212_1909f_1632022332_120.jpg)
குடும்பத்துடன் கொண்டாடி பார்க்க வேண்டிய திரைப்படம்
நடிகர் பாலசரவணன் பேசுகையில், ”நானும் ரியோ ராஜும் சகோதரர்கள் போல் தான். எங்கள் நட்பு, விஜய் டிவியின் ‘கனா காணும் காலங்கள்’ தொட்டே தொடர்ந்து வருகிறது. இயக்குநர் பத்ரியிடம் என்னை இக்கதாப்பாத்திரத்திற்கு பரிந்துரைத்ததற்கு ரியோ ராஜுக்கு நன்றி.
![திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-ppp-rio-script-7205221_19092021090212_1909f_1632022332_327.jpg)
குடும்பங்கள் இணைந்து, கொண்டாடி பார்க்கும் திரைப்படமாக இப்படம் இருக்கும். 2021 செப்டம்பர் 24 அனைவரும் இப்படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் நன்றி” எனக் கூறினார்.
100 சதவீதம் காமெடி சரவெடி
இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் பேசுகையில், ”திரையுலகை சேர்ந்தவர்களும், ஊடக நண்பர்களும் இந்த பொதுமுடக்க காலத்தில் மிகப்பெரிய துன்பங்களை கடந்து வந்தார்கள். அவை அனைத்தையும் கடந்து இப்போது திரையரங்குகள் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளதும், எங்கள் படம் வெளியாவதும், அனைவருக்குமே மிக மகிழ்ச்சி.
தயாரிப்பாளர்களின் துணிச்சலான முடிவுகளால் மட்டுமே இன்று இது சாத்தியமாகியுள்ளது. இப்படத்தில் ரியோ மிகச்சிறப்பாக செய்துள்ளார் இன்னும் பல படங்கள் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். ரம்யா நம்பீசன் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸர்.
![ரியோ ராஜ் - ரம்யா நம்பீசன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13108818_dd.jpg)
எளிதில் எந்த ஒரு படத்தையும் ஒப்புக்கொள்ள மாட்டார். இந்தப்படத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார். பால சரவணன் இப்படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருப்பார். பூர்ணிமா ரவி இளைய தலைமுறை ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை பெறுவார். 100 சதவீதம் காமெடி சரவெடியாக இத்திரைப்படம் இருக்கும். செப்டம்பர் 24 அனைவரும் இப்படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
![பிளான் பண்ணி பண்ணனும்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13108818_rr.jpg)
முழுக்க முழுக்க சிரித்து மகிழும் திரைப்படம்
கலை இயக்குநர் PPS சரவணன் கூறுகையில், இப்படம் முழுக்க முழுக்க சிரித்து மகிழும் பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். கரோனா சோகங்களை மறந்து அனைவரும் சிரிக்கும் படியான படமாக இருக்கும். செப்டம்பர் 24 அனைவரும் இப்படத்தை திரையரங்கில் பார்த்து சிரித்து கொண்டாட வேண்டும் எனக் கூறினார்.
பாடல்கள் வித்தியாசமானதாக இருக்கும்
பாடலாசிரியர் நிரஞ்சன் பாரதி பேசுகையில், எல்லோரும் கூறியது போல் இப்படம் மன அழுத்தத்தை போக்கும் மருந்தாக, திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடி மகிழும் படைப்பாக இருக்கும்.
நான் இப்படத்தில் நான்கு பாடல்கள் எழுதியுள்ளேன். ஒவ்வொரு பாடல்களும் வித்தியாசமானதாக இருக்கும் ஒவ்வொரு பாடலிலும் பணிபுரிந்தது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது என்றார்.
![திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-ppp-rio-script-7205221_19092021090212_1909f_1632022332_327.jpg)
படப்பிடிப்பில் முழு சுரந்திரம்
நடிகர் MS பாஸ்கர் பேசுகையில், இத்திரைப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் திரைப்படமாக இருக்கும். இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் படப்பிடிப்பில் எனக்கு முழு சுரந்திரத்தை தந்தார்.
எனது சிறிய பரிந்துரைகளை நான் சொன்ன சிறு வசனங்களை, எந்த தயக்கமும் இல்லாமல் ஏற்றுக்கொண்டார். பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் எங்கள் கடின உழைப்பிற்கு உங்கள் ஆதரவை தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்றார்.