ஈகில் ஐ புரொடக்ஷன் தயாரிப்பில் 'அதே கண்கள்' திரைப்படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் இயக்கியுள்ள படம் 'பெட்ரோமாக்ஸ்'. இதில், யோகி பாபு, முனீஸ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள இத்திரைப்படம், டாப்சி நடிப்பில் வெளியான ‘அனந்தோ பிரம்மா’ எனும் தெலுங்கு படத்தின் ரீமேக்காகும். அக்டோபர் 11ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்குநர் ரோஹின், நடிகை தமன்னா, நடிகர்கள் காளிவெங்கட், முனிஸ்காந்த் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
அப்போது ரோஹின் கூறுகையில், பெட்ரோமாக்ஸ் படம் தெலுங்கு ரீமேக் படம், தமிழுக்கு ஏற்றாற் போல் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக அனைவரும் கடின உழைப்பை கொடுத்துள்ளனர். ஒவ்வொரு நாளும் இரவு முழுவதும் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறும். இதனால் படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் மிகவும் டல்லாக இருப்பார்கள்
மியூசிக் டைரக்டர் ஜிப்ரானை அதிகம் கஷ்டப்படுத்தி விட்டேன். பிரபாஸின் படத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த அந்த நேரத்திலும் நான் என் படத்தின் வேலையை வாங்கிக் கொண்டிருந்தேன். இந்த படத்தில் அவருடைய பின்னணி இசை மிக அருமையாக வந்துள்ளது என்றார்.
தொடர்ந்து தமன்னா பேசுகையில், அனைவருக்கும் தசரா நல்வாழ்த்துகள். இப்படத்தில் எனது பெயர் பேனரில் மேலே இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்தப்படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இயக்குநருக்கு இரண்டாவது படமாக இருந்தாலும் இந்தப் படத்தை குறுகிய நாட்களில் மிகச் சிறப்பாக கொடுத்துள்ளார். தொடர்ந்து நல்ல படங்களை கொடுக்கவேண்டும். மேலும் இப்படம் ஹாரர் நிறைந்த காமெடி படமாக வந்துள்ளது எனவே அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளில் பாருங்கள் என்றார்.
இதையும் வாசிங்க: செத்துக்கிட்டு இருக்கும் தமிழ் சினிமாவை 'பெட்ரோமாக்ஸ்' பிழைக்க வைக்குமா..!