அஜித் நடிப்பில் கடந்த ஆகஸ்டில் வெளியான திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை'. 'தீரன் அதிகாரம்' ஒன்று படபுகழ் ஹெச். வினோத் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
இத்திரைப்படம் 2016 ஆம் ஆண்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் இந்தியில் வெளியான 'பிங்' திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இத்திரைப்படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்தார். அஜித் வழக்கறிஞராக நடித்திருந்த இப்படத்தில், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தாரியாங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் இரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்தப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து, தற்போது தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண் இந்தப்படத்தில் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜுவுடன் இணைந்து போனி கபூரின் பேவியூ புரொஜக்ட்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. தெலுங்கில் எம்சிஏ (மிடில் கிளாஸ் அப்பாயி) படத்தை இயக்கிய வேணு ஸ்ரீராம் இயக்குகிறார்.
ஏற்கனவே அஜித்-சிறுத்தை சிவா கூட்டணியில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் வெற்றிகண்ட 'வீரம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'கட்டமராயுடு' படத்தில் பவன் கல்யாண் நடித்திருந்ததது குறிப்பிடத்தக்கது.
'கட்டமராயுடு' படம் தெலுங்கில் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் 'நேர்கொண்ட பார்வை'-யின் ரீமேக்கும் நல்ல வரவேற்பை பெறும் என்ற மகிழ்ச்சியில் பவன் கல்யாண் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இறுதியாக இவர், 2018ல் 'அக்னியாதவசி' என்ற படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.