வாஷிங்டன்: திருமணம் செய்துகொண்டு 12 நாளில் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்துள்ளனர் ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் - தயாரிப்பாளர் ஜோன் பீட்டர்ஸ்
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகணத்திலுள்ள மாலிபுவில் வைத்து ஜனவரி 21ஆம் தேதி மிக எளிமையான முறையில் பமீலா - ஜோன் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிவதாகக் கடந்த சனிக்கிழமை அறிவித்துள்ளனர்.
இது பற்றி பமீலா ஆண்டர்சன் கூறியதாவது:
வாழ்க்கை என்பது ஒரு பயணம். அதில் காதல் ஒரு நடைமுறை. இந்த உலகளாவிய உண்மையை மனதில் வைத்து நாங்கள் இருவரும் திருமண உறவிலிருந்து விலகி, காதல் மீது நம்பிக்கை வைத்து பரஸ்பரம் பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளோம்.
இந்த முடிவுக்கு ஜோன் தரப்பினரும், எனது நலம்விரும்பிகளும் ஆதரவு அளித்துள்ளனர். நாங்கள் இருவரும் இணைந்து வாழ்வதற்கு என்னவெல்லாம் தேவை என்பதை புரிந்துகொள்ள கொஞ்ச காலம் எடுத்துக்கொள்ள அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பமீலா ஆண்டர்சன், தயாரிப்பாளர் ஜோன் பீட்டர்ஸோடு பல ஆண்டுகளாகப் பழகிவந்தாலும், அவருடன் இணைந்து ஒரு நாளும் வாழ்ந்தது இல்லை எனக் கூறப்படுகிறது. தற்போது திருமணத்துக்கு பிறகு அவரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்பதாலே பமீலா இந்த முடிவை எடுத்திருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது கனடாவிலுள்ள, லேடிஸ்மித் நகரில் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவுள்ளாராம் பமீலா.
இதனிடையே பமீலா - ஜோன் ஆகியோர் திருமணம் செய்துகொண்டதற்கு ஆதாரமாகச் சான்றிதழ் எதுவும் பெறவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
52 வயது பமீலாவும், 74 வயது ஜோன் பீட்டர்ஸும் 35 ஆண்டுகள் டேட்டிங் உறவிலிருந்து பின்னர் திருமணம் செய்துகொண்டனர். மணவாழ்க்கையைத் தொடங்கி 12 நாள்களிலேயே பரஸ்பரம் பிரிந்து வாழ முடிவு எடுத்திருப்பது ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 35 வருட டேட்டிங்: 52 வயதில் 5ஆவது திருமணம் செய்துகொண்ட பமீலா ஆண்டர்சன்