இயக்குநர் பா. இரஞ்சித் தயாரிப்பில், பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள 'ரைட்டர்' திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நேற்று (டிசம்பர் 20) நடைபெற்றது.
இதில் பா.ரஞ்சித், சமுத்திரக்கனி, இனியா, சுப்பிரமணிய சிவா, இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகர்கள் பலரும் நிகழ்ச்சியில் பேசினார்கள்.
அதில் நடிகை இனியா, "இப்படத்தில் நடித்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. சண்டைக்காட்சிகளும் இதில் எனக்கு இருக்கிறது. குதிரை ஓட்ட பயிற்சி எடுத்து இப்படத்தில் நடித்தேன்" எனக் கூறினார்.
ரைட்டர் வலியை கடத்தும்
இயக்குநரும், 'ரைட்டர்' திரைப்படத்தின் தயாரிப்பாளருமான பா. இரஞ்சித் நிகழ்வில் பேசுகையில், " எனது தயாரிப்பில் சேத்துமண், குதிரைவால் ஆகிய படங்கள் விருது விழாக்களில் கலந்துகொண்டு விருதுகள் பெற்றுள்ளன. இந்த 'ரைட்டர்' படம் தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதைகளில் ஒன்று என்று நினைக்கிறேன்.
'பரியேறும் பெருமாள்', 'ரைட்டர்' போன்ற படங்கள் வலியை பார்வையாளனுக்குக் கடத்துகின்றன. எனது படத்தில் நடித்த, பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கு வேறு திரைப்படங்களில் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.
தற்போது, தமிழ் சினிமா ஆரோக்கியமாக உள்ளது. பழைய வாதங்களுக்கு பதிலை தேடுவதுதான் எனது பாதை. ஜெய்பீம் உலக அளவில் வரவேற்பு பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது" என்றார்.
இதையும் படிங்க: சமூக வலைதளங்களில் வைரலாகும் ரைட்டர் பட போஸ்டர்கள்