திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் எனப்படும் அகாதமி விருது வழங்கும் விழா வருகிற 9ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் நிகழ்ச்சிக்கான எதிர்ப்பார்ப்புகள் உச்சத்தைத் தொட்டுள்ளன.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான விருந்தினர்களை வரவேற்கும் ரெட் கார்ப்பெட் எனும் சிவப்புக் கம்பள வரவேற்பிற்கான ஆயத்தங்கள் முழுவீச்சில் இன்று தொடங்கியது. அத்துடன், வண்ண விளக்குகள் அலங்காரம், வரவேற்புத் திரை அலங்கரிப்பு வேலைகள் என முக்கியப் பணிகளை பணியாளர்கள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மேற்கொண்டனர்.
ஹாலிவுட்டின் முக்கிய சினிமா அரங்குகளில் ஒன்றான டால்பி திரையரங்கில் நடைபெறவுள்ள இந்த விழாவில், ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் தவிர, டாம் ஹேங்க்ஸ், க்ரிஸ் ராக், டைக்கா வெய்டிட்டி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கி, விழா மேடையை அலங்கரிக்கவுள்ளனர்.
ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட தயாரிப்பாளர்களான லயனெட் ஹோவெல் டெய்லர் மற்றும் ஸ்டெஃபானீ அல்லய்ன் ஆகியோர் இந்த 2020 ஆஸ்கர் நிகழ்வையும் தயாரிக்கவுள்ளனர். முன்னதாக நடைபெறவுள்ள இந்த ஆஸ்கர் நிகழ்வு குறித்து பேசிய அவர்கள், மக்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் இந்த விழாவில், இப்படிப்பட்ட ஆற்றல்மிகுந்த விருது வழங்குபவர்கள் குழு அமைந்திருப்பது குறித்து நன்றி தெரிவித்திருந்தனர்.
திரைத்துறையினர் பெரிதும் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் இந்த ஆஸ்கர் நிகழ்வை, சென்ற வருடம்போலவே தொகுப்பாளர் இல்லாமல் நடத்தவிருப்பதாக நிகழ்ச்சியை வழங்கவிருக்கும் ஏ பி சி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாஃப்டா விருதுகள் 2020 முழு பட்டியல்