தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் 19ஆம் தேதி முதல் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
5ஆம் கட்ட ஊரடங்கு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ள சூழலில், பல தொழில் துறையினருக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால், அதில் திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
திரையரங்குகள் மூடப்பட்ட பின், சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்ப வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது. ஆகையால், பிற தொழில்களுக்கு விதி முறைகளுடன் அனுமதி வழங்கியது போன்று திரையரங்குத் தொழிலை மீண்டும் தொடங்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "திரையரங்கு உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வெளியிட வேண்டுகிறோம்.
அரசு வெளியிடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்த குறைந்தது, இரண்டு வார கால அவகாசம் தேவைப்படுவதால், அரசு உடனடியாக விதிமுறைகளை வெளியிட்டு திரையரங்கு உரிமையாளர்கள் முன் தயாரிப்புப் பணிகளை முடிக்க ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம்.
இந்தியாவில் சாமானிய மக்களின் ஒரே பொழுதுபோக்கு திரையரங்குகளில் திரைப்படங்களைக் கண்டுகளிப்பது. அதனால், சமூக இடைவெளியின் அடிப்படையில் குறைந்த எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் விற்பனை செய்து, பார்வையாளர்களை திரைப்படங்கள் பார்க்க அனுமதிக்க முடியும்.
தமிழ்நாட்டில் தற்போது 1000 திரையரங்குகள் இயங்கி வருகின்றன. இவற்றில் தனி திரையரங்குகள் 700; இரண்டு மற்றும் அதற்கும் அதிகமான திரைகளை கொண்ட மால், மல்டிஃபிளெக்ஸ் சுமார் 300ஆக உள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான கேளிக்கை வரி 8% முழுவதும் ஆக ரத்து செய்ய வேண்டுகிறோம். இதனை ரத்து செய்வதன் மூலம் திரையரங்க டிக்கெட் கட்டணம் குறையும்.
அதிக எண்ணிக்கையில் மக்கள் குடும்பமாக படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இதன்மூலம் திரையரங்கு, விநியோகஸ்தர்கள், அரசு என அனைத்து பிரிவினருக்கும் வருவாய் கூடுதலாகக் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். தனி திரையரங்குகளுக்கான GST வரியை 5% விழுக்காடாக குறைத்து நிர்ணயம் செய்ய மத்திய அரசு ஆவன செய்ய வேண்டுகிறோம்.
மால், மல்டிஃபிளெக்ஸ் திரைகளுக்கு உள்ளீடு அனுமதியுடன் தற்போது நடைமுறையில் உள்ள 18% , 12% GST வரியை ரத்து செய்து, ஒரே GST 12% நிர்ணயம் செய்து தர வேண்டுகிறோம்.
தேசிய ஊரடங்கு காலத்திற்கு முன்பாக, தனி திரையரங்குகளுக்கு அதிகப்பட்சமாக 15% பார்வையாளர்கள் அளவில் தான் வருகை இருந்தது. மேற்கூறிய கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றும் பட்சத்தில் 20% பார்வையாளர்கள் வரை திரையரங்குக்கு வரக்கூடிய சூழல் ஏற்படும். இல்லாத பட்சத்தில் 10% பார்வையாளர்களுக்கும் குறைவாகவே வருவார்கள்.
அதேபோல், தற்போது திரையரங்குகள் மூடியுள்ள நிலையில், திரையரங்கிற்கான மின் கட்டணத்தில் 50% சலுகையைத் தர வேண்டுகிறோம்.
மேலும் ஊரடங்கு முடியும் வரை திரையரங்கிற்கான சொத்து வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டுகிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.