சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் படம் 'அண்ணாத்த'. சிவா இயக்கும் இந்த படத்தில், நயன்தாரா, மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. டி. இமான் இசையமைக்கிறார். கரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த படப்பிடிப்பு கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது.
அப்போது படக்குழுவினர் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரஜினிக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ரஜினி, வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். 'அண்ணாத்த' படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
இதனையடுத்து 'அண்ணாத்த' படப்பிடிப்பு மார்ச் 16ஆம் தேதி மீண்டும் தொடங்கி சென்னையில் நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ரஜினி தனது பகுதிகளை முடித்துக்கொடுத்துள்ளார்.
இதுவரை எடுக்கப்பட்ட படத்தை பார்வையிட்ட தயாரிப்பாளர் கலாநிதி மாறன், குறிப்பிட்ட ஓரிடத்தில் பாடல் காட்சி ஒன்று இடம் பெற்றால் கதையோட்டம் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று படக்குழுவினரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதை ரஜினியிடம் படக்குழு தெரிவிக்க அவரும் ஒரு பாட்டுதானே எடுத்துடலாம் என்று கூறிவிட்டாராம். தற்போது ரஜினி அமெரிக்காவில் இருப்பதால் அங்கேயே இப்பாடலை எடுத்துவிட படக்குழு முடிவுசெய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ரஜினியை குழந்தையை போல் பார்த்துக்கொள்ளும் படக்குழு!