கோவை: இருளர் பழங்குடியினர் பாடல் மூலம் கேரள மாநிலம் முழுவதும் பிரபலமாகி வருகிறார், நஞ்சம்மாள் பாட்டி.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் நஞ்சம்மாள். கடந்த 15 ஆண்டுகளாக 'ஆசாத் கலா சமிதி' என்ற அமைப்பின் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று, இருளர் பழங்குடியினர் பாடல்களை பாடி வருகின்றார். இவரது கணவர் உயிரிழந்து 7 ஆண்டுகள் ஆன நிலையில், தனது பாடல்கள் மூலம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
இதையடுத்து மலையாள நடிகர் பிருத்திவிராஜ், பிஜு மேனன் நடித்து வெளியான ஐயப்பனும் கோஷியும் என்ற மலையாளப் படத்தில் பழங்குடியினர் தாலாட்டு பாடலை நஞ்சம்மாள் பாட்டி பாடியுள்ளார்.
'கலக்காத்தா சந்தனம் மேரா வெகு வேகா பூத்திருக்கு, பூப்பறிக்க போகிலாமோ' என்ற வரிகளில் உள்ள பாடல் தற்போது சிறிய கிராமங்கள் முதல் நகரங்கள் வரை என கேரள மாநிலம் முழுவதும் ஒலித்து வருகிறது.
மேலும், இந்தப் பாடல் யூடியூப்பிலும் பிரபலமாகி வருகிறது. இதனால் கேரளா மாநிலம் முழுவதும் நஞ்சம்மாளின் பாடல் பற்றி, பேசப்பட்டு வரும் நிலையில், திரைப்பட தயாரிப்பாளர்களும் இவரை அணுகி பாடல் பாடக் கேட்டு வருகிறார்களாம்.
இதுதொடர்பாக நஞ்சம்மாளிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
'பதின்மூன்று வயது முதல் இருளர் பழங்குடியினர் பாடல்களைப் பாடி வருகிறேன். இடையில் பாடல்களை நிறுத்தியிருந்தேன். பின்னர் விழிப்புணர்வுப் பாடல்களை இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பாடி வருகிறேன்.
எனது அமைப்பின் மூலம் சினிமாவில் பாட வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. முதலில் தயக்கமாக இருந்தது. பின்பு இந்தப் படத்தில் 2 பாடல்களை பாடியதோடு மட்டுமல்லாமல், சில காட்சிகளிலும் நடித்து உள்ளேன்' என்றார்.
தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், கடந்த ஆண்டு தமிழ்நாடு - கேரள எல்லையான ஆனைகட்டியில் டாஸ்மாக் மதுபானக் கடை திறந்தபோது, ஆதிவாசி பெண்கள் அமைப்பான 'தாய்க்குலம்' அமைப்புடன் சேர்ந்து, டாஸ்மாக் கடைத் திறப்புக்கு எதிரானப் போராட்டத்தில் கலந்துகொண்டு போராட்டத்தை தீவிரப்படுத்தினார். இதையடுத்து அந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது. இதில் இவர் மிகப் பெரிய பங்கு வகித்தார்.