தெலுங்கு சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் முக்கியமானவர் என்.டி. ராமாராவ். இவர் நடிகராக இருந்து 'தெலுங்கு தேசம்' என்ற கட்சியைத் தொடங்கி அரசியலில் இறங்கினார். மேலும் என்.டி.ஆர் ஆந்திராவில் 1983ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளார். 1996ஆம் ஆண்டு என்.டி.ஆர் காலமானாலும் தெலுங்கு ரசிகர்களும் ஆந்திரா, தெலங்கானா மக்களும் இப்போது வரை என்.டி.ஆரை கொண்டாடி வருகின்றனர்.
இன்று (மே 28) என்.டி.ராமாராவின் 98ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தெலுங்கு திரையுலகினரும் ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் அவர் நினைவாக கருத்துகளையும் என்.டி.ஆரின் படக்காட்சிகளையும் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி என்.டி. ராமாராவுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, "எங்களுடைய தெலுங்கு தேசம், நாட்டின் பெருமைமிகு தலைவர் நந்தமுரி தரக ராமாராவுக்கு 'பாரத ரத்னா' வழங்குவது தெலுங்கு மக்களுக்குப் பெருமை. அஸ்ஸாமியப் பாடகரும் இசைக்கலைஞருமான பூபேன் ஹசரிகாவிற்கு எப்படி மரணத்திற்குப் பின்பு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதோ... அதுபோல ராமாராவுக்கு விருது வழங்கப்பட வேண்டும்.
இந்த கெளரவத்தை என்.டி.ஆரின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கப்பட்டால், அது தெலுங்கு மக்களுக்கு வழங்கப்படும் கெளரவமாக இருக்கும். அந்த மிகச்சிறந்த மனிதரின் 98ஆவது பிறந்தநாளில் இதை நினைவு கூர்கிறேன்" எனக் கூறியுள்ளார்.