சென்னை: அமீர் இயக்கும் இறைவன் மிகப்பெரியவன் திரைப்படத்தின் அறிமுக விழா சென்னையில் இன்று (பிப்ரவரி 14) நடைபெற்றது. இதில் அமீர், வெற்றிமாறன், கரு. பழனியப்பன், யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் ராம்ஜி, தங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இப்படத்திற்கு வெற்றிமாறன் தங்கம் கதை எழுத அமீர் திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் இசை அமைக்கிறார்.
இவ்விழாவில் பேசிய கரு. பழனியப்பன், "இந்தத் தலைப்பில் படம் இயக்க உங்களைவிட வேறு யாரும் இருக்கப்போவதில்லை என்று அமீரிடம் கூறினேன். இப்படம் அரசியல் பேசுகிறதா என்று எனக்குத் தெரியாது.
நீண்ட நாள்களுக்குப் பிறகு அமீர் முகத்தில் உற்சாகம் காணப்படுகிறது. படம் வெளியாகும்போது ரசிகர்களுக்கும் அந்த உற்சாகம் இருக்கும்" என்றார்.
இதையடுத்து வெற்றிமாறன், "நீண்ட நாள்களுக்கு முன் தங்கம் என்னிடம் இந்தக் கதையைச் சொன்னார். பிறகு அமீர் இப்படத்தை இயக்க முன்வந்தார். தற்போது நாங்கள் அனைவரும் இணைந்து இப்படத்தை உருவாக்குகிறோம்" எனக் கூறினார்.
தொடர்ந்து அமீர் பேசுகையில், "தமிழ்ச் சினிமாவில் இயக்குநர்களே கதை சொல்ல வேண்டும் என்பது துயரம். பட்ஜெட் பிரச்சினை காரணமாக சந்தனத்தேவன் திரைப்படம் தடைப்பட்டுள்ளது. இப்படத்தில் புதுமுகங்கள் நடிக்கின்றனர்.
இயக்குநர்களுக்கான மரியாதை தமிழ்ச் சினிமாவில் குறைவாக உள்ளது. தற்போதுள்ள இயக்குநர்கள் தங்களது சாதி அல்லது அரிசியலை வெளிப்படுத்தும்விதமாகப் படம் இயக்குகின்றனர். இந்தச் சமூகம் மோசமான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
சூரியை வைத்து ஒரு படம் இயக்குகிறேன். இப்படத்தில் புதிதாக ஒன்றும் இல்லை. நீங்கள் உங்கள் வாழ்வில் பார்த்ததை மீண்டும் உங்களுக்கு காண்பிக்கப்போகிறேன் அவ்வளவுதான். யுவன் தயாரிப்பிலும் ஒரு படம் இயக்குகிறேன். இனி அடுத்தடுத்து படங்கள் இயக்க உள்ளேன்" என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு! - அண்ணாமலை குற்றச்சாட்டு