சென்னை: நீங்கள் மனதார நேசிக்கும், நம்பும் நபர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை அறியும்போது, நீங்கள் என்ன செய்வீர்கள்? அந்தச் சூழ்நிலையை எவ்வாறு கையாளுவீர்கள்? அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவீர்களா அல்லது அவர்களின் குற்றத்தைச் சொல்லி எதிர்ப்பீர்களா என்னும் பரபரப்பான கதைக்களத்தில் உருவான நடுவன் படத்தை சோனிலைவ் (SonyLIV) தங்களது தளத்தில் வெளியிடவுள்ளது.
வஞ்சம், அறியாமையின் இடையில் சிக்கி ஏமாறும் முதன்மை கதாபாத்திரமான பரத் நிவாஸ் பாத்திரத்தின் பயணம்தான் இந்தப் படம். 'நடுவன்' (மத்தியதர வாழ்க்கை வாழும் ஒருவன்) தன்னை ஏமாற்றியவர்களின் யதார்த்தத்தை உணரும் ஒரு இளம் தந்தையின் கதை.
அறியாமைக்கு அடிபணிவாரா நாயகன்?
ஏமாற்றத்தின் பின்னணியில், அவர் தனது அறியாமையை உணர்ந்து, தன்னை ஏமாற்றுபவர்கள் ஏன் அந்த முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதை அறிய முயற்சிக்கிறார். தன்னை ஏமாற்றியவர்கள், அவர்களது விருப்பத்தின்பேரில் செய்கிறார்களா அல்லது கட்டாயப்படுத்தப்படுகிற சூழ்நிலையில் தவறிழைக்கிறார்களா என்பதைக் கண்டுபிடிக்க முயலுகிறார் கதாநாயகன்.
தேடல் பயணத்தில் சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிவருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் நேசித்து நம்பியவர்களின் ஏமாற்றுதல், வஞ்சத்தை அவர் கண்டுபிடித்து சமாளிக்க வேண்டும். அதிர்ச்சியூட்டும் பயண சூழ்நிலைகளில் நகரும் கதை ஒரு திரில்லராக மாறுகிறது.
இந்தப் பயணத்தில் அவர் வெற்றிபெறுவாரா அல்லது அவர் நேசிப்பவர்களுக்காக தனது அறியாமைக்கு அடிபணிவாரா என்பதே கதை.
முதல் தயாரிப்பு படத்தைக் காண ஆவல்
இது குறித்து படத் தயாரிப்பளார் லக்கி சாஜிர் பேசுகையில், “வாழ்வில் முடிவுகளை எடுப்பது என்பது ஒரு சிக்கலான செயல். வஞ்சம் எப்படி ஏமாற்றமாக மாறுகிறது, யாரோ ஒருவர் அதை எப்படி ஏற்றுக்கொள்கிறார் என்பதை 'நடுவன்' கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்.
எனது முதல் படம் என்பதால் மட்டுமல்ல, மனித அனுபவத்தையும் கூறும் கதை என்பதால் இந்தத் திரைப்பட வெளியீட்டுக்காக, நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். விரைவில் SonyLIVஇல் வெளியிடப்படும் திரைப்படத்தைக் காண ஆவலுடன் உள்ளேன்” என்றார்.
இதையும் படிங்க: 'கட்டில்' திரைப்பட இயக்குநரை வாழ்த்திய ஆளுநர்!