நட்பே துணை படத்தைத் தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள படம், 'நான் சிரித்தால்'. ராணா இயக்கியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா மேனன், ரவிக்குமார், ரவி மரியா, 'பரியேறும் பெருமாள்' மாரிமுத்து, 'படவா' கோபி, 'எரும சாணி' சாரா, முனீஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தப் படம் குறித்து ஹிப்ஹாப் ஆதி பேசுகையில், "ஒரு சில வருடங்களுக்கு முன்பு 'கெக்க பிக்க' யூ ட்யூபில் வைரலாகப் பரவிய குறும்படம். அப்படத்தின் கதையை மையமாகவைத்து 'நான் சிரித்தால்' படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் என்பதால் படத்தில் வலிமையான கருத்து இருக்க வேண்டும் என்று எண்ணினோம்.
குறும்படத்தை போல திடீரென்று ஆரம்பித்து உடனே படம் முடித்துவிட முடியாது. நான் சிரித்தால் படத்தில் எனது கதாபாத்திரத்தின் பெயர் காந்தி. காந்தி பெயரில் இந்தப் படத்தில் ஒரு பாடல் உள்ளது. ஆனால் அந்தப் பாடல் இன்னும் வெளியாகிவில்லை.
முழுக்க முழுக்க நான் சிரித்தால் படம் காமெடியாக இருக்கும் என்பதால் என் கதாபாத்திரம் எதற்கெடுத்தாலும் சிரிப்பது என்று அமைந்திருக்கும். படத்தின் முதல் பாதியில் என் கதாபாத்திரத்தை எல்லோரும் கேலிசெய்து சிரிக்கும்போது பார்ப்பவர்களுக்கு, பரிதாபமாக இருக்கும். ஆனால் அதற்கு பிறகு ஒரு வலிமையான கருத்து இருக்கும்.
'நான் சிரித்தால்' படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க ஆக்ஷன் படம் ஒன்று நடிக்கிறேன். அதற்காக வீட்டிலேயே தனிப்பட்ட முறையில் மார்ஷியல் ஆர்ட்ஸ் வைத்து கற்றுவருகிறேன்.
எதிர்காலத்தில் பாரதியார் பாடல்களை வைத்து முழுநீள ஆல்பம் தயாரிக்கவுள்ளேன். அதேபோல் பாரதிதாசன் கவிதைகளை ஆல்பமாக உருவாக்க ஆசை உள்ளது. இவர்கள் மட்டுமல்லாது இன்னும் பெரிய கவிஞர்களின் படைப்புகளை, தயாரிக்கும் வாய்ப்பு அமைந்தால் மகிழ்ச்சியாக அதைச் செய்வேன்.
நான் கல்லூரியில் படிக்கும்போதே அவ்வப்போது மேடைகளில் பாடல்களைப் பாடிவருவது வழக்கம். 2011ஆம் ஆண்டு தேர்தல் வந்ததால் அது குறித்து 'எலக்ஷன் ஆன்தம்' பாடினோம். இந்த நிகழ்ச்சிக்கு ஒருமுறை அன்னா ஹசாரே வந்திருந்தார்.
வேறொரு மேடையில் பாடி முடித்து கீழே இறங்கியதும் காவல் துறையினர் நீங்கள் யார் என்று விசாரித்தார்கள். எங்கள் கல்லூரி அடையாள அட்டையைக் காண்பித்தோம். கல்லூரி மாணவர்கள் என்பதால், காவல் துறையினர் எதுவும் கூறவில்லை. அன்று நாங்கள் பாடிய 'எலக்ஷன் ஆன்தம்' சர்ச்சையைக் கிளப்பியது.
படிப்படியாக சினிமாவுக்குள் நுழைந்து, இசையமைப்பாளர் ஆகினேன். தற்போது கதாநாயகனாக வளர்ந்து நிற்கிறேன். முதல் படத்திலிருந்து இயக்குநர் சுந்தர்.சி எனக்கு ஆதரவு அளித்துவருகிறார். அவர் குடும்பத்தில் ஒருவனாக இருப்பதில் மகிழ்ச்சி.
சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் அனிருத்தை இரண்டு மூன்று இடங்களில் சந்தித்திருக்கிறேன். என் இசையில் அவர் பாடுவதற்கு வாய்ப்பு அமைந்தால் அவரைப் பாடவைப்பேன்.
தற்போது நான் பி.ஹெச்.டி. படித்துவருகிறேன். இறுதிவரை வேலை செய்துகொண்டேயிருக்க வேண்டும் என்பதுதான் எனது அதிகபட்ச ஆசை" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மக்கள் செல்வனுடன் மீண்டும் ஜோடி சேரும் லேடி சூப்பர் ஸ்டார்!