பட்டதாரி என்ற திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஜய் விஷ்வா. இவரும் இப்படத்தில் நடித்த மிர்னா மேனனும் காதலித்து திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் மூன்று ஆண்டுகள் கழித்து தங்களுக்குத் திருமணம் நடக்கவில்லை என்றும், போலியான சான்றிதழ்களை வைத்து தன்னை அவர் மிரட்டுகிறார் எனவும் மிர்னா மேனன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விஜய் விஷ்வா மீது மிர்னா மேனன் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில், "அபி சரவணன் கொடுத்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை" எனக்கூறி அதனைத் தள்ளுபடி செய்யுமாறு உயர் நீதிமன்றத்திற்கு மனு அளித்திருந்தார். இது தொடர்பாக டிசம்பர் 22 அன்று இந்த வழக்கில் தீர்ப்பு கிடைத்துள்ளது.
இது குறித்து விஜய் விஷ்வா செய்தியாளரிடம் பேசினார். அவர் கூறுகையில், "நான் மிர்னாவை 2016ஆம் ஆண்டு எனது வீட்டிற்கு அழைத்துச்சென்று என் பெற்றோரிடம் அறிமுகப்படுத்தினேன். அப்போது நீங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று என் வீட்டில் சொன்னார்கள்.
ஒரே வீட்டில் வசித்தோம்
மிர்னா மேனனின் பெற்றோர் வெளிநாட்டிலிருந்ததால் அவர்களிடம் வீடியோ சேட்டிங்கில் அனுமதியும், வாழ்த்தும் பெற்று 2016ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி மதுரையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டோம். சென்னை வந்த பின்பு தனியாக வீடு எடுத்து ஒரே வீட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக வாழ்ந்துவந்தோம்.
2018 நவம்பர் மாதம் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக நான் சென்றிருந்த நிலையில், என்னை விட்டு மிர்னா மேனன் விலகிவிட்டார். இது குறித்து விசாரிக்கச் சென்றபோது தான், என் மீதும், நான் செய்துவரும் சமூகப் பணிகள் குறித்தும் அவதூறான குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்தினார்.
தீர்ப்பு கிடைத்துள்ளது
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகையாளர்களை நான் சந்தித்தபோது எனக்கும் எனது மனைவிக்குமான பிரச்சினையைச் சட்டப்பூர்வமாக அணுகிக் கொண்டிருக்கிறேன் எனக் கூறினேன். இப்போது அந்த வழக்கில் தீர்ப்பு கிடைத்துள்ள நிலையில் அது குறித்த விவரங்களை உங்களுக்குத் தெரியப்படுத்த நான் கடமைப்பட்டுள்ளேன்.
தீர்ப்பில், மிர்னா மேனனும், நானும் திருமணம் செய்துகொண்டது உண்மைதான் என்றும், இரண்டு மாதத்திற்குள் அவர் இணைந்து வாழ வேண்டும் என்றனர். மேலும் அவர்கள் அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள சில விஷயங்களையும் இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன்.
ஏற்றுக்கொள்ள முடியாது
இருவரும் திருமணம் செய்யவில்லை எனக் கூறியுள்ள மிர்னா மேனன் எதற்காக தன்னுடைய கடன் விண்ணப்பப் பத்திரங்களில் கணவர் பெயர் விஜய் விஷ்வா எனக் குறிப்பிட்டுள்ளார்? எனக்குத் தமிழ் தெரியாததால் அவர் பல ஆவணங்களிலும், வெற்றுத் தாள்களிலும் கையெழுத்துப் பெற்றுக்கொண்டார் என மிர்னா மேனன் கூறியுள்ளது ஏற்புடையது அல்ல.
ஒரு பொறியியல் பட்டதாரியான அவர் இப்படி எந்த ஒரு ஆவணத்தையும் படித்துப் பார்க்காமல் கையெழுத்திட்டுள்ளார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மனு தள்ளுபடி
நாங்கள் ஒன்றாக கணவன், மனைவியாக வாழ்ந்ததை நேரடிச் சாட்சியாகக் கண்ட எனது பெற்றோர், வீட்டில் வேலை பார்த்த நபர்கள் அனைவரும் அளித்த வாக்குமூலங்கள் உண்மைதான் என்று கூறி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் மிர்னா மேனன் தங்களுக்குத் திருமணம் நடக்கவில்லை என ஒரு ஆதாரமும் சமர்ப்பிக்காத காரணத்தினால் அவர் தாக்கல்செய்த மனுவைத் தள்ளுபடி செய்ததுடன், எனக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தீர்ப்பும் கிடைத்துள்ளது.
கட்டாயப்படுத்த மாட்டேன்
அவர் என்னுடன்தான் வாழ வேண்டும் என ஒருபோதும் நான் கட்டாயப்படுத்த மாட்டேன். ஆனால் அவருக்காக நான் எப்போதும் காத்திருப்பேன். ஏனென்றால் என் காதல் உண்மையானது. என் காதலைப் புரிந்துகொண்டு அவர் மீண்டும் என்னிடம் திரும்பிவந்தால் மகிழ்ச்சியடைவேன். காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் திருமணத்திற்குப் பிறகும் அதே காதலைத் தொடர வேண்டும்.
அதேபோல கணவன், மனைவி இருவருக்கும் இடையிலான பிரச்சினைகளை அவர்களே பேசித் தீர்த்துக்கொண்டால் இதுபோன்ற வழக்குகளுக்கு வேலையே இருக்காது. சமூகத்தில் அவர்களது பெயருக்கும் களங்கம் ஏற்படாது.
எனவே விவாகரத்து செய்ய நினைப்பதற்கு முன் கணவன், மனைவியர் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொள்ளாமல் தங்களுக்குள்ளேயே பேசி தீர்த்துக்கொள்வதுதான் நல்லது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆம்புலன்ஸ்க்கு தனி செயலி கொண்டு வரலாம்: நடிகர் அபி சரவணன் கோரிக்கை!