நார்வே தலைநகர் ஓஸ்லோவில் ஆண்டுதோறும் நார்வே தமிழ் திரைப்பட விழா நடைபெறுகிறது. தமிழ் திரைப்படத் துறையில் படம், நடிப்பு, பாடல், பாடகர், இசை, இயக்கம், தொழில்நுட்பம் போன்ற பல பிரிவுகளில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்துப் பாராட்டி ஊக்குவிப்பதற்காக இவ்விழா நடத்தப்பட்டுவருகிறது.
வி.என். மியூசிக் டிரீம்ஸ் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் இந்த விழா இந்தாண்டு ஏப்ரல் 30ஆம் தேதிமுதல் மே 3ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.
இந்தத் திரைப்பட விழாவில் சுரேஷ் காமாட்சி இயக்கிய 'மிக மிக அவசரம்' என்ற படம் இரண்டு விருதுகளை வென்றுள்ளது. சிறந்த இயக்குநருக்கான பாலுமகேந்திர விருது சுரேஷ் காமாட்சிக்கும், சிறந்த நடிகைக்கான விருது நடிகை ஸ்ரீ பிரியங்காவுக்கும் வழங்கப்படவுள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியான 'மிக மிக அவசரம்' பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. பெண்கள் சந்திக்கும் சமூக பிரச்னைகள், பெண் காவலர் ஒருவர் சந்திக்கும் மன ரீதியிலான பாதிப்பு, அடக்குமுறை உள்ளிட்டவற்றைக் கதைக்களமாகக் கொண்டு வெளியான இந்தப் படத்தில், ஸ்ரீ பிரியங்கா பெண் காவல் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
ஹரீஷ், முத்துராமன், இ. ராமதாஸ், லிங்கா, வி.கே. சுந்தர், சீமான் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ், கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி நிறுவனங்கள் இப்படத்தை தயாரித்திருந்தன.