இயக்குநர் ராஜூ முருகன் எழுதிய கதை, வசனத்தில் சரவண ராஜேந்திரன் இயக்கியுள்ள படம் 'மெஹந்தி சர்க்கஸ்'. இப்படம் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, தயாரிப்பாளர் ஈஸ்வரன், இயக்குநர் ராஜூமுருகன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் தந்தை ஈஸ்வரன் பேசியதாவது, 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தை தயாரித்த என் மகனுக்கு முதல் நன்றி. இந்தப்படம் ஒரு காதல் காவியம். பாலியல் வன்முறைகளுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் இந்தப்படம் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும். தயவுசெய்து மெஹந்தி சர்க்கஸ் படத்தை இளைஞர்கள் தியேட்டரில் வந்து காணவேண்டும் என வேண்டுகோள் வைத்தார். இதனையடுத்து பேசிய இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் இசைக்கு இன்ஸ்பிரேஷன் இளையராஜா சார்தான். ஒரு படம் வெற்றி அடைய படம் பெரிதாக சத்தம் போட வேண்டும். இல்லை என்றால் மொத்த மீடியாவும் படத்தைக் கொண்டாட வேண்டும். இன்னும் பத்து வருடம் கழித்து பார்த்தாலும் இந்தப்படம் மக்கள் மனதில் நிற்கும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
மேலும் படத்தின் கதாநாயகன் மாதம்பட்டி ரங்கராஜன் பேசுகையில், எல்லோரும் ஏன் சமையல் பிஸ்னெஸை விட்டுவிட்டு நடிக்க வேண்டும்? என்று கேட்டார்கள். ஆனால் இப்படியான தரமான சினிமாவை மிஸ் பண்ண முடியாது. என்னைப் பொறுத்தவரை சினிமா தொழிலும், சமையல் தொழிலும் ஒன்றுதான். என்னை சரியாக வழிநடத்தும் ஈஸ்வரன் அப்பாவுக்கு நன்றி எனத் தெரிவித்தார். 'மெஹந்தி சர்க்கஸ்' படத்திற்கு கதை, வசனம் எழுதிய இயக்குநர் ராஜூமுருகன் தெரிவிக்கையில், இப்படம் தொடங்குவதற்கு துவக்கப் புள்ளியாக இருந்த ரமேஷ் மற்றும் ஈஸ்வரன் அப்பாவிற்கும் நன்றி. இந்தப்படம் ரொம்ப எளிமையான நேர்மையான படமாக இருக்கும். இது சிம்பிளான ஒரு காதல் கதை. தனது அண்ணனின் உழைப்பிற்கான பலன் கிடைக்கும் என நம்புகிறேன் என கூறினார்.
இயக்குநர் சரவண ராஜேந்திரன் பேசியதாவது, எல்லாரும் என்னை நிதானம் பொறுமை என்றார்கள். காத்திருப்புக்கான பலனாக இந்தப்படம் வந்துள்ளது. இந்தப்படத்திற்கு துவக்கப்புள்ளியாக இருந்தவர் ஈஸ்வரன் அப்பா. படத்தில் அவர் ஜீவாவாக வாழ்ந்திருக்கிறார். ஷான் ரோல்டனை சின்ன இசைஞானி என்று சொல்லலாமா? என்று கூட பேசுவோம். அவர் சூப்பர் டீலக்ஸ் க்ளைமாக்ஸ் போல பேசுவார். மாரிமுத்து சார், விக்னேஷ் காந்த், வேல.ராமமூர்த்தி சார் உள்பட அனைத்து நடிகர்களும் மிக அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளனர். ஞானவேல் ராஜா படத்தைப் பார்த்து நல்லாருக்கு என்று சொன்ன பிறகு தான் நான் உயிர்த்தெழுந்தேன் என வியப்புடன் தெரிவித்தார்,