நியூயார்க்: பாலியல் குற்றச்சாட்டு வழக்கின் விசாரணைக்காக நியூயார்க் நீதிமன்றத்துக்கு வந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீனால் தங்களுக்கு நிகழ்ந்த பாதிப்பு குறித்து நடிகைகள் ரோஸ் மேக்கவுன், ரோசன்னா அர்குவெட் பேட்டியளித்தனர்.
பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், தங்களது சினிமா வாழ்க்கையை பாழாக்கியதாகவும் ஹாலிவுட் நடிகைகள், பெண் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் முன்னணி தயாரிப்பாளராக திகழும் ஹார்வே வெயின்ஸ்டீன் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
சுமார் 80க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் வெயின்ஸ்டீன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதில் 67 பேர் பாலியல் ரீதியாக அவர் துன்பறுத்தியதாகத் தெரிவத்தனர். இந்தக் குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.
இதையடுத்து வெயின்ஸ்டீன் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வெளிவந்த நிலையில், பாலியல் குற்றங்கள் நிகழ்த்தியதாக வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து வெயின்ஸ்டீன் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் தொடர்பாக நியூயார்க் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில், வெயின்ஸ்டீன் நீதிமன்றத்துக்கு வந்தார். இதனிடையே அவர் மீது குற்றம் சுமத்தியவர்களின் ஒருவரான ரோஸ் மேகவுன் நீதிமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது, வெயின்ஸ்டீன் நிகழ்த்திய குற்றங்கள் பற்றியும், அவரையும் தாக்கிப் பேசினார். மேலும், அவரது குற்றங்கள் குறித்து தற்போது வரை குரல் கொடுக்காதவர்களுக்காகக் குரல் கொடுக்க வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இதேபோல் வெயின்ஸ்டீன் மீது குற்றம் சுமத்திய மற்றொரு நடிகையான ரோசன்னா அர்குவெட், எனது சினிமா வாழ்க்கை பாழானதற்கு அவர்தான் காரணம். இன்னும் என்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களுக்காக இந்த வழக்கின் விசாரணையில் தொடர்ந்து பங்கேற்கவுள்ளேன் என்றார்.
வெயின்ஸ்டீன் மீது சுமத்தப்பட்ட ஐந்து பாலியல் குற்றங்கள் தொடர்பான விசாரணை நியூயார்க் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணை வரும் மார்ச் மாதம் வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, வெயின்ஸ்டீன் மீது குற்றம் சுமத்தியவர்கள் அவர் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவித்த பிறகும் மின்னஞ்சல், குறுஞ்செய்தி மூலம் உரையாடியதை ஆதாரமாக வைத்து வாதாட இருப்பதாக அவரது தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.