கோயம்புத்தூர்: மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பில்லை. திரையரங்கம் திறந்தவுடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: விஜய் ரசிகர்கள் பல்வேறு நற்செயல்களை செய்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மாஸ்டர் திரைப்படம் ஓடிடி-யில் வெளி வர வாய்ப்புகள் இல்லை. திரையரங்குகளில் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
திரையரங்கம் திறந்தவுடன் தயாரிப்பு நிறுவனம் தேதியை முடிவெடுக்கும். திரையரங்குகளை நம்பி பலரும் இருக்கின்றனர். அப்படி இருக்கையில் இனிமேலும் திரையரங்குகள் திறக்கப்படாமல் இருப்பது என்பது வாழ்வாதாரத்தை மேலும் பாதிக்கின்ற வகையில் இருக்கிறது.
எனவே, திரையரங்குகள் திறந்தவுடன் மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான தேதி, தயாரிப்புக் குழுவில் இருந்து வெளிவரும் என்றார்.
முன்னதாக, கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் குடும்பங்களுக்கு நடிகர் விஜய் ரசிகர்கள் மன்றத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டு, நலத்திட்ட உதவிகளை பயனாளர்களுக்கு வழங்கினார்.
இதையும் படிங்க: 'சிறப்பான ஒரு அப்டேட் வரப்போகுது' - வலிமை படம் குறித்து வில்லன் தகவல்!