சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவன அலுவலகத்தில், மறைந்த இயக்குநரும், தனது குருநாதருமான கே.பாலசந்தர் திருவுருவச் சிலையை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் ரஜினிகாந்துடன் இணைந்து திறந்துவைத்தார். இந்தச் சிலை திறப்பு விழாவில் நடிகர் நாசர், இயக்குநர்கள் மணிரத்னம், கே.எஸ். ரவிக்குமார், கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய இயக்குநர் மணிரத்னம்,
சினிமா மீது எனக்கு ஆசை வந்ததற்கு முக்கிய காரணம் கே. பாலசந்தர்தால்தான். சாதாரண சினிமா ரசிகனாக இருந்த எனக்கு சினிமாவுக்கு பின்னால் இருக்கும் ரகசியத்தை பாலசந்தர் மூலமாக தெரிந்துகொண்டேன். அதன்பின் அவரது படங்களை பார்த்து பலவற்றைக் கற்றுக்கொண்டேன். நான் அவருடன் பணியாற்றாமல் கற்றுக்கொண்ட மாணவன்.
நான் கல்லூரி படிக்கும்போது பாலசந்தரின் படம் ஒன்றை பார்த்தேன். அதில் தோன்றிய நடிகர் எதார்த்தமான பேச்சுகளை பேசியது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதன்பின் எனக்கு பாலசந்தர் மீதும் கமல் மீதும் காதல் ஏற்பட்டது. அவர்கள் இருவரிடமும் இருந்து நான் பலவற்றைக் கற்றுக்கொண்டேன்.
கமல் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்தது தற்போது உள்ள தலைமுறையினருக்கு நம்பிக்கை அளித்தது. பாலசந்தர், கமல் ஆகியோரின் பாதையில்தான் நாங்கள் அனைவரும் பயணித்துவருகிறோம். பாலசந்தர் என்னிடம் ஒரு நண்பரைப் போன்று பழகினார். அவரிடமிருந்து சினிமாவை மட்டுமின்றி பிற மனிதர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டேன் என்றார்.