திருவனந்தபுரம்: கோவிட்-19 சோதனை மேற்கொண்ட மலையாள நடிகர் ப்ரித்விராஜ் தனக்கு கரோனா தொற்று இல்லை என்பதை உறுதிசெய்துள்ளார்.
மலையாள முன்னணி நடிகர்களுள் ஒருவரான ப்ரித்விராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோவிட்-19 சோதனையின் அறிக்கையை பதிவிட்டுள்ளார். அதில், கோவிட்-19 சோதனை மேற்கொள்ளப்பட்டதில் கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிய படத்தின் படப்பிடிப்புக்காக ஜோர்டன் நாட்டுக்கு சென்றிருந்த ப்ரித்விராஜ், கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு திரும்ப முடியாமல் இருந்தார். கிட்டத்தட்ட 50 நாள்கள் வரை படப்பிடிப்பு நடைபெற்ற பாலைவனப் பகுதியில் படக்குழுவினர்களோடு வசித்து வந்த அவர், கடந்த மாதம் 22ஆம் தேதி நாடு திரும்பினார்.
இதைத்தொடர்ந்து தனது சொந்த மாநிலமான கேரளாவுக்கு வந்த அவர் அரசு சார்பில் தனிமைப்படுத்தப்பட்டார். 7 நாட்கள் வரை அங்கிருந்த அவருக்கு கோவிட்-19 சோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது சோதனையின் முடிவில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதியான நிலையில், வீட்டுக்கு திரும்பி தனிமைப்படுத்திக்கொள்வதை மேலும் 7 நாட்களுக்கு தொடர்கிறார்.
ப்ரித்விராஜ் - பிஜூ மேனன் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான அய்யப்பனும் கோஷியும் படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளனர்.