'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து விஜய் தற்போது நெல்சன் இயக்கி வரும் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 'பீஸ்ட்' படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
'பீஸ்ட்' படத்தைத் தொடர்ந்து விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் புதியப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்காலிகமாக இப்படத்திற்கு 'தளபதி 66' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கும் எனத்தெரிகிறது. மேலும் குடும்ப சென்டிமென்ட் கலந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், 'தளபதி 66' படத்தில், 'தெறி' படம் போன்று விஜய் பெண்குழந்தைக்குத் தந்தையாக நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. விஜய்யின் மகளாக நடிக்க தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் மகள் சித்தாராவை நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல் உண்மையா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஏற்கெனவே மகேஷ் பாபுவுக்கும் விஜய்க்கும் ஒரு நல்ல இணக்கம் உண்டு. மகேஷ் பாபு நடிப்பில் வெளியான 'ஒக்கடு', 'போக்கிரி' திரைப்படங்கள் தமிழில் விஜய்யை வைத்து 'கில்லி', 'போக்கிரி' என ரீமேக் செய்யப்பட்டு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜய்யுடன் பணியாற்றுவது எனக்கு புது அனுபவம் - இயக்குநர் வம்சி