பிரின்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில், இயக்குநர் ரவி தேவா இயக்கத்தில், பாடலாசிரியர் சினேகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்துக்கு 'ஓஜோ' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் புதுமுகங்களான சிவசுந்தர் நாயகனாகவும், சுவாதி, லூபானா ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடிக்கின்றனர். யோகிபாபு, மனோபாலா மொட்டை ராஜேந்திரன், திவ்யதர்ஷினி, 'கும்கி' அஸ்வின், இளவரசு, ரோகிணி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் நடைபெற்று வருகிறது.
அமானுஷ்ய திரில்லர் பாணியில் 'ஓஜோ' உருவாகி வருவதால், படத்தில் இடம்பெறும் அமானுஷ்யக் காட்சிகள், தனி பங்களாவில் அரசின் அறிவுரைகளின்படி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் ரவி தேவா கூறியதாவது:
கதாநாயகி ப்ரியாவின் பெற்றோர் காதலித்து திருமணம் செய்து கொண்டு, பின்னர் பிரிந்து வாழ்கின்றனர். இந்தச் சூழ்நிலையில் காதல் என்பதில் நம்பிக்கை இல்லாமல் உள்ள பிரியாவை கதாநாயகன் சிவா விரட்டி, விரட்டி காதல் செய்கிறார்.
இருவரும் காதல் வயப்பட்டு திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்கின்றனர். அப்போது ஒன்பது வயது சிறுமி ஒருவர் அமானுஷ்யமாக வந்து ப்ரியாவை பல விதங்களில் துன்புறுத்தி கொலை செய்ய முயற்சி செய்கிறார்.
சிவாவின் நண்பரான சினேகன், யார் இந்த சிறுமி? ஏன் அவர் ப்ரியாவை விரட்டுகிறார்? என்பதை ஓஜோ போர்டு உதவியுடன் தெரிந்து கொண்டு அதிர்ச்சி அடைகிறார்.
பின்னர் அந்த அமானுஷ்ய சக்தியை அவர் எப்படி விரட்டுகிறார் என்பதை விளக்கும் வகையில் புதுமையான திரைக்கதையுடன் 'ஓஜோ' திரைப்படம் அமைந்துள்ளது.
படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஊட்டி, கேரளா உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது. படத்தின் வெளியீடு என்பது சூழ்நிலைக்கு ஏற்ப திரையரங்கில் வெளியாகுமா அல்லது ஓடிடி பிளாட்ஃபார்மில் வெளியாகுமா என்பது முடிவு செய்யப்படும்” என்றார்.
இதையும் படிங்க: நான் எல்லைக்கு போறேன்...நீங்க ஒலிம்பிக்கு போங்க: ட்விட்டர் பிரச்னையை முடித்த கங்கனா